தஞ்சை மாவட்டம் திருவையாற்றில் காவிரி நதியின் கரையில் உள்ள ஒரு சமாதி- கோயிலில் ஒவ்வொரு ஆண்டு ஜனவரி மாதத்தில் வரும் புஷ்ய பகுல பஞ்சமி திதியன்று இந்தியாவின் பிற பகுதிகளில் இருந்து மட்டுமின்றி, உலகத்தின் அனைத்து மூலைகளில் இருந்தும் கர்நாடக இசை மேதைகள் திரண்டு ஒரே நேரத்தில் பஞ்ச ரத்ன கீர்த்தனைகளை பாடுகின்றனர்.
தமிழ்நாட்டின் பெருமைகளில் ஒன்றாகத் திகழும் கர்நாடக இசைப் பாரம்பரியத்தின் அறிவிக்கப்படாத ஒரு குரு பீடமாகத் திகழும் அந்த இடம்தான், தான் வணங்கிய ஸ்ரீ இராம்பிரானை நினைத்து கர்நாடக இசையின் அனைத்து இராகங்களிலும் பல்லாயிரம் பாடல்களைப் பாடிய ஸ்ரீ தியாகராஜரின் சமாதி - கோயிலாகும்.
காவிரி, குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு என்ற ஐந்து நதிகள் பாயும் புண்ணியத் தலத்தில், ஸ்ரீ பஞ்சநதீஸ்வரர் என்றழைக்கப்படும் ஐயாரப்பரின் நேரான பார்வையில், எப்போதும் கேட்டுக்கொண்டிருக்கும் பறவைகளின் ஒலிகளுக்கிடையே, மென்மையாய் நம் மேனியை தழுவிச் செல்லும் தென்றல் வீசும் காவிரி நதிக்கரையில் அமைந்துள்ளது ஸ்ரீ தியாக பிரம்மம் என்றழைக்கப்படும் ஸ்ரீ தியாகராஜரின் திருக்கோயில் அமைந்துள்ளது.
திருவாரூரில் 1767ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் 6ஆம் நாள் பிறந்தவர் தியாகராஜர். மிகச் சிறிய வயதிலேயே கர்நாடக இசை கற்க அனுப்பி வைக்கப்பட்ட தியாகராஜர், வேகமாக இசையைக் கற்று பாடத் துவங்கினார். கர்நாடக இராகங்களில் புலமை பெற்றாலும், அவருடைய பாடல்கள் அவர் உள்ளத்தை பிறவியிலேயே குடிகொண்டிருந்த ஸ்ரீ இராம பிரானின் பெருமையை பாடும் பக்திப் பாடல்களாகவே இருந்தன.
ஸ்ரீ இராமனின் சிறிய சிலையை வணங்கி எப்பொதும் பக்தியுடன் அவர் பெருமையை பாடி வந்த தியாகராஜரின் பெருமை அறிந்த தஞ்சை அரசர் அவரை அவைப் பாடகராக்க பரிசுகளுடன் அழைப்பு அனுப்பி வைத்தபோது அதை நிராகரித்துவிட்டார். தனது புலமை இராம பிரானின் புகழ்பாடத்தானே தவிர வேறு பெருமைக்கு அல்ல என்று கூறி மறுத்துவிட்டார். இதனால் கோபமுற்ற அவரது சகோதரர், தியாகராஜர் வணங்கிவந்த இராம பிரானின் சிலையை ஆற்றில் எறிந்துவிட, அதனால் சோகமுற்ற தியாகராஜர், ஒவ்வொரு திருத்தலமாகச் சென்று ஸ்ரீ இராம பிரானைத் தொழுது பாடினார். இப்படி ஒரு புனித யாத்திரை மேற்கொண்டு திருத்தலங்களைச் சுற்றி வந்த தியாகராஜர், ஐந்து நதிகள் பாயும் இந்தப் புன்னிய தலத்தில் இறுதியாக வந்துசேர்ந்தார்.
|