இந்த வார புனிதப் பயணத்தில், குஜராத்தில் உள்ள ஜகந்நாதர் கோயிலில் நடைபெறும் ரத யாத்திரைக்கு உங்களை அழைத்துச் செல்கிறோம்.
ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதத்தில் வரும் திவிதியை நாளில் இந்த ரத யாத்திரை துவங்கி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்கின்றனர்.
அகமதாபாத்தில் உள்ள ஸ்ரீஜகந்நாதர் கோயிலில் இருந்து அன்றைய தினம் 3 ரதங்கள் புறப்படும். முதல் ரதத்தில் ஸ்ரீஜகந்நாதர் எழுந்தருளுவார். இரண்டாவதாக இருக்கும் ரதத்தில் அவரது சகோதரி சுபத்ராவும், மூன்றாவது ரதத்தில் சகோதரன் பலராமனும் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சி அளிக்கின்றனர்.
இந்த விழாவில் நூற்றுக்கணக்கான துறவிகளும், ஆயிரக்கணக்கான பக்தர்களும் கலந்து கொண்டு, அப்பகுதியையே பக்தியால் ஆக்கிரமித்து விடுகின்றனர்.
தேர் புறப்பட்டு முதலில் அகாதாஸ் என்ற இடத்திற்குச் செல்கிறது. அகாதாஸ் என்பது கலாச்சார உடற்பயிற்சிக் கூடமாகும். அப்பகுதிக்கு ஜகந்நாதரின் தேர் வந்ததும், உடற்பயிற்சி வீரர்கள் பல்வேறு சாகசங்களை செய்து காண்பிப்பார்கள்.
விழாவின்போது அந்நகரமே திருவிழாக் கோலம் மூண்டிருக்கும். மூலை முடுக்குகளில் எல்லாம் ஸ்ரீ ஜகந்நாதரின் அருளையே பாடிக் கொண்டிருக்கும்.
சாலையில் ஜகந்நாதரின் தேர் வலம் வரும்போது, அப்பகுதியில் இருப்பவர்கள் மலர் தூவி ஜகந்நாதரை வரவேற்கின்றனர்.
|