இக்கோயிலிற்குள் இருக்கும் சித்தாமிர்த தீர்த்தம் (குளம்) மிகுந்த சக்தி வாய்ந்ததாக்க் கூறப்படுகிறது. கிருத யுகத்தில் இத்தலத்திலுள்ள சிவ லிங்கத்தின் மீது காமதேனு பாலைப் பொழிய, அந்தப்பால் வழிந்தோடிச் சென்று சித்தாமிர்த தீர்த்தத்தில் கலந்ததனால் இக்குள நீர் சக்தி வாய்ந்ததாக்க் கருதப்படுகிறது. பகைச் சக்திகளால் பீடிக்கப்பட்டவர்கள் இக்குளத்தில் மூழ்கி எழ, அவற்றின் பிடியிலிருந்து விடுபடுவார்கள் என்கிறது தலப் புராணம்.
இக்குளத்தில் மீன்கள் உண்டு, தவளைகள் ஏதுமில்லை. காரணம் இக்குளத்தில் நீராடி தவம் செய்த முனிவரின் தவத்தை தவளைகள் கலைத்ததால், அவர் இட்ட சாபத்தினால் தவளைகள் ஏதும் இக்குளத்தில் இருப்பதில்லை என்று கூறுகின்றனர்.
இத்திருத்தலத்தின் முதற் பெயர் புள்ளிருக்குவேலூர் என்பதே. காரணம், இக்கோயிலில் அருள்பாலிக்கும் சிவபெருமானை ஜடாயு (புள்), ,ரிக் வேதம் (இருக்கு), முருகன் (வேல்), சூரியன் (ஊர்) ஆகியோர் வழிபட்டதால் புள்ளிருக்குவேலூர் என்றே அழைக்கப்பட்டுள்ளது.
விசுவாமித்திர்ர், வசிட்டர், திருநாவுக்கரசர், திருஞ்ஞான சம்மந்தர், அருணகிரிநாதர் ஆகியோர் இத்திருத்தலம் வந்து சிவபெருமானை வணங்கியுள்ளனர். இத்தனைப் புகழ் வாய்ந்த இத்திருத்தலம் நாடி சோதிடத்தின் மையமாக திகழ்ந்து வருகிறது. கை கட்டை விரல் ரேகையைக் கொண்டு ஒருவரின் இறந்த, நிகழ், எதிர்காலத்தை கூறுகின்றனர்.
எப்படிச் செல்வது:
இரயில் : சென்னையிலிருந்து தஞ்சாவூர் செல்லும் ரயில் மார்க்கத்தில் வைத்தீஸ்வரன் கோயில் இரயில் நிலையம் உள்ளது.
சாலை : சென்னையிலிருந்து 235 கி.மீ. தூரத்திலுள்ள புகழ் பெற்ற சிவத்தலமான சிதம்பரம் சென்று, அங்கிருந்து 26 கி.மீ. பயணம் செய்து இக்கோயிலிற்குச் செல்லலாம்.
விமானம் : அருகிலுள்ள விமான நிலையம் சென்னை, திருச்சி விமான நிலையத்திலிருந்தும் சாலை மார்க்கமாக இத்திருக்கோயிலிற்குச் செல்லலாம். |