தமிழ்நாட்டின் எல்லைக்கருகே, ஆந்திர மாநித்தின் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது தென் கயிலாயம் என்றழைக்கப்படும் ஸ்ரீ காளஹஸ்தி.
சிவ பெருமானின் பஞ்ச பூத திருத்தலங்களில் வாயுத்தலம் என்ற சிறப்புப் பெற்றது இப்புண்ணிய திருத்தலம். சுவர்ணமுகி நதிக்கரையில் மூன்று இராஜ கோபுரங்களுடன் அமைந்துள்ள ஸ்ரீ காளத்திநாதர் திருக்கோயிலில் வாயு ரூபமாக சிவபெருமான் திகழ்வதால் இத்திருத்தலத்திற்கு தனிப்பெருமையுண்டு.
திருக்கோயில் புராணம்:
இத்திருக்கோயிலில் சிவபெருமான் தன்னை மிகுந்த பக்தியுடன் வணங்கிய மூன்று ஜீவராசிகளையே தனது பெயராக ஏற்றுத் திகழ்கிறார். ஸ்ரீ என்ற பெயர் கொண்ட சிலந்தி, சிவலிங்கத்தின் மீது கூடு கட்டி நிழல் தந்து வழிபட்டு வந்ததெனவும், காலா எனும் பாம்பு, ரத்தினக்கல்லை சிவலிங்கத்தின் மீது வைத்து வழிபட்டு வந்ததாகவும், இவ்வனத்தில் வாழ்ந்த யானை, ஒவ்வொரு நாளும் நீர் கொண்டு வந்து சிவலிங்கத்தை அபிடேகம் செய்து வணங்கி வந்ததாகவும், அவைகளின் பக்தியில் தன்னை மறந்த சிவபெருமான், அவைகளுக்கு மோட்சம் அளித்து தனது உடலில் ஏற்றது மட்டுமின்றி, அவைகளின் பெயராலேயே தான் இத்திருத்தலத்தில் வணங்கப்பட வேண்டும் என்று அருளியதாகவும் இத்திருத்தலப் புராணம் கூறுகிறது.
இத்திருத்தலத்திலுள்ள மூலவருக்கு அருகிலுள்ள விளக்கு எப்பொழும் எரிந்துகொண்டேயிருக்கும். சிவனின் உடலிலேயே பாம்பிற்கு இடமளிக்கப்பட்டுள்ளதால், ராகு - கேது தோஷம் நீங்க இங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றது.
வாயுப் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இத்திருத்தலத்திற்கு வந்து ஓர் இரவு தங்கி, மறுநாள் காலை பூஜைகள் செய்து வழிபட்டால் அப்படிப்பட்ட நோய்களிலிருந்து விடுதலை பெறலாம்.
இக்கோயிலின் மற்றொரு தனிச்சிறப்பு, பொதுவாக சூரிய, சந்திர கிரகண காலங்களில் எல்லா கோயில்களும் மூடப்படும். ஆனால் இத்திருத்தலத்தில் மட்டும்தான் அப்பொழுது சிறப்பு பூஜைகள் செய்யப்படும்.
|