மராட்டியப் பேரரசர் சத்ரபதி சிவாஜியின் குடும்பத்தினர் வழிபட்ட குலதெய்வம் மட்டுமின்றி, மராட்டிய மாநிலத்தில் ஏராளமானவர்கள் வழிபடும் துல்ஜா பவானி சக்தி தேவதையின் கோயில், அம்மாநிலத்தின் உஸ்மனாபாத்தில் உள்ள துல்ஜாபூரில் உள்ளது!
மராட்டிய மாநிலத்தில் உள்ள மூன்று சக்தி பீடங்களில் ஒன்றான துல்ஜா பவானி, நமது நாடு முழுவதிலும் உள்ள 54 சக்தி பீடங்களில் ஒன்றாகும்.
புராதண இந்தியாவில் இரண்டு வனப் பகுதிகள் இருந்ததாக இதிகாசங்களில் குறிப்பிடப்பட்டுள்ளவை ஒன்று நைமிஸ்ய ஆரண்யம், மற்றொன்று தண்டகாரண்யம்.
மராட்டிய மாநிலத்தின் மரத்வாடா பகுதி தண்டகாரண்யத்தின் ஒரு பகுதியாகும். இப்பகுதிக்கு யமுனாச்சல பர்வதம் என்றும், பாலாகாட் என்றும் பெயருண்டு. யமுனாச்சலத்தின் மலைப் பகுதியில் துல்ஜாபூர் அமைந்துள்ளது. இந்த பகுதியில்தான் சாலிகிராமக்கல் என்றழைக்கப்படும் மிதக்கும் கல்லால் ஆன சுயம்பு மூர்த்தி உள்ளது.
மற்ற கோயில்களைப் போல் அல்லாமல், துல்ஜா பவானி ஆலயத்தின் கொடி மரம் ஓரிடத்தில் நிலைத்து நிற்காமல் மாறக்கூடியது என்று கூறப்படுகிறது. அதேபோல இக்கோயிலில் உள்ள சிலையும் இடம்பெயரக் கூடியதே. துல்ஜா பவானி விக்ரகத்தை ஒரு எந்திரத்தை உருவாக்கி ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்ததாக கூறப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் இச்சிலை அதன் இடத்தில் இருந்து எடுக்கப்பட்டு கோயிலை பிரதக்ஷனம் செய்து அல்லது பரிக்கிராமா செய்யப்பட்டு ஸ்ரீ எந்திரம், மகாதியோ, காண்டிராவ் ஆகியவற்றுடன் மீண்டும் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
துல்ஜா பவானி திருக்கோயில் ஹேமத் பண்டி எனும் கட்டட கலையின் வடிவத்தில் நிர்மானிக்கப்பட்டுள்ளது. கோயிலிற்குள் நுழைய இரண்டு பெரிய கதவுகள் உள்ளன. கோயிலிற்குள் நுழைந்ததும் நாம் பார்க்கும் கல்லோல் தீர்த்தம் 108 புனிதத் தீர்த்தங்களின் சங்கமமாகும். அங்கிருந்து சில அடி தூரத்தில் கோமுக் தீர்த்தம் உள்ளது. இதில் உள்ள தண்ணீர் எப்பொழுதும் ஓடிக்கொண்டே இருக்கிறது. கோமுக் தீர்த்தத்திற்குப் பிறகு சித்தி விநாயகரின் கோயிலும், அதனைக் கடந்து செல்லும் போது சர்தார் நிம்பால்கர் உருவாக்கிய அழகிய வேலைப்பாடுகள் உள்ள கதவுகள் வருகின்றன. அதற்குள் நுழைந்ததும் ரிஷி மார்க்கண்டேயர் இடது புறத்திலும், நாகரா என்று சொல்லக்கூடிய பெரிய முரசு வலது பக்கத்திலும் உள்ளன.
|