உலக முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் இயேசுவையும் கன்னி மரியாளையும் தங்களது தெய்வமாக வணங்கி வருகின்றனர். கிறிஸ்து பிறப்பு நன்னாளையொட்டி கேரள மாநிலத்தில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க செருதலை புனித அமலோற்பவ மாதா ஆலயத்தின் வரலாற்றினை காண்போம்.
கிறிஸ்மஸ் விழாவின் போது குழந்தை இயேசுவையும் அவரது தாய் மரியாளையும் உலக முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் வணங்கி ஆராதிக்கின்றனர். பரிசுத்த தேவமாதா இயேசுவின் தாயாக இருப்பதுடன், அவரை பின்பற்றும் கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் தாயாக இருந்து வருகிறார். இறைமகன் இயேசு கிறிஸ்து தனது உடலையும், இரத்தத்தையும் திருப்பலி மூலம் கிறிஸ்தவர்களுக்கு நாள்தோறும் வழங்கி வருகிறார்.
உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கடவுளின் அருளை பெற ஒரு பாலமாக அன்னை மரியாளை கருதுகின்றனர். மரியாள் ஆசீர்வதிக்கப்பட்டவள் என்றும், திருக்குடும்ப வாழ்க்கையில் இறைமகன் இயேசுவுடன் வாழ்ந்ததாகவும் கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். அதன் அடிப்படையில் பக்தி முயற்சிகள் மற்றும் திருப்பலிகளில் பங்கேற்பதின் மூலம் நற்கருணையையும், அவரின் ஆசீர்வாதத்தையும் பெற்றுக் கொள்கின்றனர்.
கன்னி மேரி இறைமகன் இயேசு கிறிஸ்துவின் தாய் என்பதை எல்லோரும் அறிவோம். கடந்த 1854ஆம் ஆண்டு மாதா விண்ணேற்றம் அடைந்த நாளன்று போப்பாண்டவர் 9ஆம் பயஸ் மாதா ஜென்ம பாவம் இல்லாமல் உற்பவித்தவள் என்றும், இந்த உண்மையை கிறிஸ்தவர்கள் முழு மனதுடன் நம்ப வேண்டும் என்று பிரகடனம் செய்தார்.
கன்னிமேரி பரிசுத்தமானவள் என்ற நம்பிக்கை 4ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த மக்களிடம் இருந்து வந்தது கவிஞர் புனித ஆஃப்ரேம் எழுதிய 'நிஷிபியான்' கவிதைகளில் இருந்து தெரியவருகிறது. மாதா பரிசுத்தமானவள் என்பதன் கொண்டாட்டங்கள் 7ஆம் நூற்றாண்டில் இருந்து சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. 1854 ஆம் ஆண்டு மாதாவை ஜென்ம பாவம் இல்லாமல் உற்பவத்த பரிசுத்தமானவள் என்ற பிரகடனத்தை போப் 9வது பயஸ் கத்தோலிக்க திருச்சபை வரலாற்றில் (வத்திக்கான் சங்க ஏட்டில்) பதிவு செய்தார்.
கத்தோலிக்க திருச்சபையின் இந்த நம்பிக்கைக்கு ஆதாரமாக புதிய ஏற்பாட்டின் சில பகுதிகள் சுட்டிக்காட்டப்படுகின்றன. லூக்காஸ் எழுதிய திருமுகத்தில் முதல் அதிகாரம் 48வது வசனத்தில், தேவ தூதர் மரியாளின் முன் தோன்றி அருள் நிறைந்தவளே வாழ்க. ஆண்டவர் உம்முடனே என்று தொடங்கி உச்சரித்த வார்த்தைகள் மரியாளை பரிசுத்தமானவள் என்று குறிப்பிடுவதை கத்தோலிக்க குருக்கள் சுட்டிக்காட்டுகின்றன. இதனையே கத்தோலிக்க திருச்சபையின் தத்துவயியலும் தொடர்ந்து பறைசாற்றி வருகிறது. கிறிஸ்துவும் அன்னை மரியாளும் பிரிக்க முடியாதவர்கள் இதுவே மரியாள் பாவங்களில் இருந்து முற்றிலும் விடுபட்டவள் என்பதற்கு சிறந்த ஆதாரமாகும்.
|