உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில் ஹனுமானின் பக்தர்களுக்காகவே ஓர் அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டுள்ளது. நாம் வணங்கும் கடவுளான ஹனுமானுக்கு அருங்காட்சியகம் ஒன்று உருவாக்கப்பட்டிருப்பது உலகிலேயே இங்கு மட்டும்தான் உள்ளது. இது லிம்கா உலக சாதனைப் புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது.
ஹனுமானின் பக்தரான சுனில் கோம்பார் என்பவர் பல்வேறு இடங்களில் இருந்து தான் சேகரித்த அரிய பொருட்களைக் கொண்டு தனது வீட்டின் முதல் தளத்தில் இந்த அருங்காட்சியத்தை அமைத்துள்ளார். லக்னோ நகரில் உள்ள இந்திரா நகரில் அமைந்துள்ள பஜ்ரங் லிங்குன்ச் என்று பெயரிடப்பட்டுள்ள இவரது வீட்டில் இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது.
ஸ்ரீராமனின் 48 குறிப்புகளைக் கொண்ட வெள்ளியிலான பாதுகைகளும்,. ஸ்ரீராமன் ஹனுமனை அழைத்த ஆயிரம் பெயர்களும் அருங்காட்சியகத்தில் உள்ளது. ஹனுமான் சகஸ்ரநாம ஸ்தோத்திரம் என்ற சமஸ்கிருத புராணத்தில் இருந்து ஹிந்தி மொழிக்கு மாற்றப்பட்ட குறிப்புகள் உள்ளன. ஹனுமானின் கிடைத்தற்கரிய 600 படங்களை - அவற்றில் சில 17வது நூற்றாண்டைச் சேர்ந்தவை - சேகரித்துள்ள சுனில் கோம்பார், ஹனுமானின் மிக அரிதான சிலைகளையும் சேகரித்து வைத்துள்ளார்.
ஹனுமானின் தெய்வீக உருவத்தையும் சுவரில் சிற்பங்களாக செதுக்கி வைத்துள்ளார். அந்தச் சிற்பத்தில் ஹனுமானின் குடும்பம் மட்டுமின்றி, சிவபெருமான், ராமன்-சீதை, லட்சுமி அவரது ஆசிரியர் சூரியர், பவன்தேவ் ஆகியோரும் உள்ளனர். ஹனுமானின நண்பர்களான சுக்ரீவன், அங்கதன், நலன், நீலன், ஜாம்பவான் ஆகியோரும் சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளனர். கோஸ்சுவாமி துளசிதாசின் திருவுருவமும் செதுக்கப்பட்டுள்ளது.
|