உலகம் முழுவதும் வாழும் கோடான கோடி இந்துக்களின் தெய்வமாக, ஏன் உலகத் தாயாக கருதப்படும் பார்வதி தேவியின் அவதாரங்களில் ஒன்றுதான் துர்கா தேவி. பார்வதி தேவி பல்வேறு சூழ்நிலைகளில் எடுத்துள்ள அவதாரங்களில் உமாமகேஸ்வரி, கெளரி, ஜகத் மாதா, துர்கா, காளி, சாண்டி மற்றும் பைரவி ஆகியவை முக்கியமானவை. துர்கா தேவி என்றால் சர்வ வல்லமை பொருந்திய, செல்வம் மற்றும் இரக்க குணம் கொண்டவள் என்று பெயர்.
இந்த வகையில் நாடு முழுவதும் துர்கா தேவியின் பேரில் எண்ணற்ற திருக்கோயில்களை எழுப்பி மக்கள் தேவியை வழிபட்டு வருகின்றனர். இந்த வகையில், ஆந்திரப் பிரதேச மாநிலம் விஜயவாடா அருகே இந்துக்களின் புனித நதியான கிருஷ்ணா நதிக்கரையின் ஓரத்தில் உள்ள இந்திரகீழாத்ரி மலையில் குடிகொண்டுள்ள ஜெய் கனக துர்கா தேவியைக் காண வரும் பக்தர்கள் எழுப்பும் பக்தி கோஷங்கள் அந்த மலைப் பகுதி முழுவதும் ஆன்மீக மணத்தை வீசச் செய்கிறது.
இந்த மலைக் கோயிலிற்குச் செல்வதற்கு காட்டு வழி சாலையும், படிக்கட்டுகளும் உள்ள நிலையில், தேவியை தரிசிக்கச் செல்லும் பக்தர்கள் பெரும்பாலும் படிக்கட்டுகள் வழியாகவே செல்கின்றனர். குழந்தைகளும், பெண்களும் இந்தக் காட்டுப் பாதையில் படியேறிச் செல்வது கடினமாக இருக்கும் நிலையிலும், பக்திப் பெருக்கோடு அந்தப் படிகளுக்கு பூஜை செய்து வண்ணக் கோலப் பொடிகளால் அழகுபடுத்தியபடியே அன்னையை தரிசிக்கச் செல்கின்றனர். இந்த படிக்கட்டுப் பூஜை மெட்லா பூஜை என்று அழைக்கப்படுகிறது.
ஆந்திர மாநிலத்தின் பிரதான கடவுள்களில் முதலிடத்தைப் பெறுபவர் இந்த ஜெய் கனக துர்கா தேவியே. ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான பக்தர்களை தன்பால் ஈர்க்கும் சக்தியுடைவளாக ஜெய் கனக துர்கா தேவி திகழ்ந்து வருகிறார். மேலும் இங்கு நடைபெறும் நவராத்திரி விழா கொண்டாட்டங்களின் போது தங்களை அரவணைத்து பாதுகாத்து வரும் அன்னையை தரிசிக்க நீண்ட நெடிய வரிசையில் நின்று பக்தர்கள் தங்கள் காணிக்கையை செலுத்தி அம்மனுக்கு சிறப்புப் பூஜைகளை செய்கின்றனர்.
|