ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை இந்து இளம்பிறை போல் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை புந்தியில் வைத்து அடி போற்றுதுமே!
விநாயகர் சதுர்த்தியை சனிக்கிழமை முதல் நாடெங்கும் கொண்டாடி வருகின்றோம். விநாயகப் பெருமானின் இப்பிறந்தநாள் விழாவில் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தோரில் உள்ள புகழ்பெற்ற கஜரானா திருக்கோயிலிற்கு உங்களை அழைத்துச் செல்கின்றோம். 1735 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இத்திருக்கோயில் மிகுந்த புனிதத் தன்மையுடையது.
கஜரானா கோயிலின் பூசாரியாக இருந்த மங்கள்நாத் என்பவர் ஒரு கனவு கண்டார். அவருடைய கனவில் வந்த விநாயகர், தான் புதைந்துள்ளதாகவும், தன்னை தோண்டி வெளிக்கொணருமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். அகில்யா ராணியின் அரண்மனைக்குச் சென்ற மங்கள்நாத், தான் கண்ட கனவை மகாராணியிடம் சொல்ல, அவர் அங்குள்ள கிணற்றைத் தோண்டுமாறு உத்தரவிட்டார். கிணற்றைத் தோண்டியதில் விநாயகரின் திருவுருவச் சிலை கிடைத்தது. அதுவே கஜரானா கோயிலில் நிறுவப்பட்டு இன்றளவும் வழிபாடு நடந்து வருகிறது.
கஜரானா திருக்கோயிலில் விநாயகரின் திருவுருவச் சிலை வைக்கப்பட்டதற்குப் பிறகு அத்திருக்கோயிலிற்கு பெருமையும், புகழும் அதிகரித்தது. இக்கோயிலிற்கு வந்து விநாயகரை பிரார்த்திக்கும் பக்தர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படுவதாக நம்பப்படுகிறது. தனது எதிர்பார்ப்புகளைச் சொல்லி அங்கு கயிறு ஒன்றை கட்டிவிட்டுச் செல்கின்றனர். அவ்வாறு செய்த பின், தாங்கள் நினைத்து நிறைவேறியது என்று பலரும் கூறுகின்றனர். தங்களுடைய எண்ணம் நிறைவேறியதும், அந்தக் கயிற்றை அவிழ்த்துவிடுகின்றனர்.
|