முதன்மை பக்கம் » ஆன்மிகம் » ஆன்மிகம் » அருளுரை » இயற்கைக்கும் மனிதனுக்கும் உள்ள உறவு - மாதா அமிர்தானந்தமயி (Relationship between Human & Nature - Madha Amirthananthamayi)
இயற்கைக்கும் மனிதனுக்கும் உள்ள உறவு - மாதா அமிர்தானந்தமயி
செவ்வாய், 13 அக்டோபர் 2009( 19:38 IST )
கோழிக்கு ஹார்மோன் ஊசி போட்டு பெரிய முட்டையைப் பெறுவார்கள். இருளடைந்த கூண்டில் அடைத்துவைத்து தினசரி இரண்டு முட்டைகளை இடச் செய்வர். இதன் பயன் என்ன? கோழியின் ஆயுள் பாதியாகக் குறையும். நாட்டு முட்டையின் சத்து இந்த முட்டைக்கு வரவும் வராது. லாப நோக்கத்தால் மக்களின் நன்மையைக் குறித்து மனிதன் சிந்திப்பதில்லை. எதன்மீதும் கருணை தோன்றுவதில்லை. உற்பத்தியை அதிகரிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை, அதேசமயம், அனைத்திற்கும் ஒரு எல்லை இருக்கிறது. பண ஆசையால் அந்த எல்லையைக் கடந்து செல்வது இயற்கையை அழிப்பதற்கு நிகராகும்.
FILE
பறந்து அருகில் வரும் கிளிகளை, நமது மன மகிழ்ச்சிக்காகக் கூண்டில் அடைத்து வைப்பது போலவே, இயற்கையை நம்முடைய சுயநலத்திற்காகப் பயன்படுத்துகிறோம். இது இயற்கையைச் சிறையில் அடைப்பதற்கு நிகராகும். இயற்கையின் மூச்சுத் திணறல் மனித குலத்தின் அழிவிற்குக் காரணமாகும். மனிதன் வாழ வேறு வழியில்லாத நிலையில் இயற்கையை நோக்கி கோடாரியை ஏந்தினால் அதைப் புரிந்துகொள்ளளலாம். ஆனால், இது அப்படிப்பட்டதல்ல. ஆனால், இது அப்படிப்பட்டதல்ல. பேராசையால் காட்டும் அக்கிரமங்களை இயற்கை எவ்வாறு பொறுத்துக் கொள்ளும்?
அறிவியல் கண்டுபிடிப்புகளை வானளாவப் புகழவும், ஆன்மிகத்தைக் கண்களை மூடிக்கொண்டு குறைசொல்லவும் செய்யும் மக்கள், அறிவியலின் கண்டுபிடிப்புகளால் ஏற்பட்ட தீய விளைவுகள், மத தத்துவங்களால் ஏற்படவில்லை என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். வெடிமருந்து முதல் அணு குண்டு வரை உள்ள போர்க் கருவிகள் எவ்வளவு பெரிய அழிவை ஏற்படுத்தி உள்ளன! இன்று ஒவ்வொரு நாட்டின் கையிலுள்ள அணுகுண்டுகளைக் குறித்துச் சிந்தித்தால் நிம்மதியாகப் படுத்து உறங்க முடியுமா?
மதங்களுக்கிடையில் கலகங்கள் ஏற்படவில்லையா என்று கேட்கலாம். அங்கும் ஆன்மிக தத்துவங்களில் எந்தக் குறையும் இல்லை, அதைச் சுயநல லாபத்திற்காகத் தன் விருப்பத்திற்கேற்ப மாற்றங்களை ஏற்படுத்தும் மனிதனின் குறைபாடாகும். நாட்டுத் தலைவர்கள் பரஸ்பரம் போர் செய்தது போல், சத்குருமார்கள் தங்களுக்குள் சண்டை போட்டதாக வரலாறு இருக்கிறதா?
அறிவியல் கண்டுபிடிப்புகளை அம்மா நிந்திக்கவில்லை. அவை தேவையே. ஆனால் மனிதன் மனதின் கல்வியையும் கற்க வேண்டும். இன்று அதற்கு எங்குமே வழி இல்லை. எங்கும் மனிதனின் மிருக உணர்ச்சிகளை வளர்க்கக்கூடிய சூழ்நிலைகளே உள்ளன. தினமும் நாளிதழ்களில் வரும் செய்திகளைப் படித்தால், குற்றச் செயல்கள் எவ்வளவு பெருகியுள்ளன என்பதைக் காண முடியும். மனதை இத்தகு தாழ்ந்த நிலையிலிருந்து மீட்பதற்குரிய செயல்களே தியானம், ஜபம் போன்றவை. ஆனால், இதற்கு யாருக்கும் நேரம் இல்லை. 24 மணி நேரத்தில் ஒரு மணி நேரமாவது சாதனைக்காக ஒதுக்கிவைக்க எத்தனை பேரால் முடிகிறது?
விமானத்தைக் கண்டுபிடித்ததால் 100 மணி நேரம் ஆகும் பபயணத்திற்கு ஒரு மணி நேரம் போதுமானதாக உள்ளது. ஆனால், இதனால் வாழ்கையில் நெருக்கடி குறைந்ததா? இல்லை. அதிகரிக்கவே செய்துள்ளது. அப்படியிருக்க, கிடைத்ததைக் கொண்டு திருப்தி அடையத் தெரியாத மனதிற்கு எவ்வளவு பெற்றாலும் பயன் ஏது? எதிலும் அதிருப்தி மட்டுமே எஞ்சும். மனதின் அமைதி இவற்றைச் சார்ந்து இருக்கவில்லை. அமைதி வேண்டுமா? மனதின் கல்வியைப் பெற வேண்டும். உலகியல் பொருள்களில் எதை அடைந்தாலும் அமைதி இல்லையெனில் பயன் ஏது? அன்பிற்குரிய மனைவி அருகில் இருந்தாலும் வெறுப்பு, சுவைமிகுந்த உணவிலும் சுவையின்மை.
அனைத்தையும் திறந்த மனதுடன் நேசிக்கவும், இயற்கையிடமிருந்து விஷயங்களை கற்றுக் கொள்ளவும் நாம் முன்வர வேண்டும். ஒரு மணி நேரம் சாதனைக்காகச் செலவிட முடியவில்லை எனில், பலனை எதிர்பாராது தொண்டு புரிவதற்காவது சிறிது நேரத்தைச் செலவிட வேண்டும். மீதமுள்ள நேரத்தில் உண்ணவும், உறங்கவும், பொழுதுபோக்கவும் செலவிட்டுக் கொள்ளுங்கள். ஜபம், தியானம், பலனை எதிர்பாராத தொண்டு ஆகியவையே வாழ்வில் விலைமதிப்புள்ளவை ஆகும். மீதமுள்ளவை அனைத்தும் வெறும் பூஜ்யங்கள்! ஒன்று என்ற எண் முன்னால் இருந்தால்தான் பூஜ்யத்திற்கு மதிப்பு உள்ளது.
அனைவரும் அகந்தையின் அடிமைகளாவர். ஆனால், இறைவனின் அடிமையாவது மிகக் கடினம். அகந்தையின் அடிமையாவதால் அமைதியின்மையும், இறைவனின் அடிமையாவதால் அமைதியும் கிடைக்கும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இறைவன் மீது நமக்குள்ள பயபக்தி ஒருநாளும் பலவீனமல்ல. நம்முள் உள்ள நிலையானது எதுவோ அதன் மீது உள்ள அன்புதான் உண்மையான பக்தி.
அல்லாது, ஆலயத்திற்கு முன்னால் நின்று அடுத்த வீட்டுக்காரர்களிடம் உள்ள பொறாமை, வெறுப்பு ஆகியவற்றைச் சொல்லிப் பிரார்த்தனை செய்வது ஒரு நாளும் பக்தியல்ல. அனைவருக்கும் நல்ல மனதைக் கொடுக்க வேண்டும். அமைதியும், நிம்மதியும் நிலவ வேண்டும் என்று பிரார்த்திப்பதே உண்மையான பக்தி. அதுதான் உண்மையான இறை தத்துவம். அந்நிலையில், பிரார்த்தனை செய்பவனின் மனதிலும் அமைதி நிறைகிறது. மாறாக, துரோக சிந்தனை உள்ளவன் தனது அழிவுக்குத் தானே காரணமாகிறான்.