அன்பின், கருணையின் செயல்களாகத் தோன்றும் மனித சேவைகளை மட்டும் செய்யலாம்.
ஆனால், பூரண பக்தியோகத்திற்கே உரிய விரிவான சுய நிவேதனமும் உள்ளது. அது முழு வாழ்வையும், உலகம் முழுவதையும் இறைவனுடைய லீலையாகக் கருதி, ஜீவன் முழுவதையும் அவன் கைகளில் ஒப்படைத்துவிடுகிறது. அது தன்னையும், தன் உடைமைகளையும் சக்திகளையும் தனக்குச் சொந்தமெனக் கருதாமல் அவை அவனுடைமையே எனக் கருதி எல்லாச் செயல்களையும், அவனுக்கு அர்ப்பணமாகவே செய்கிறது. இதிலிருந்து அகவாழ்வையும் புற வாழ்வையும் பூரணமாக, செயல்நிலையில் நிவேதித்தல் ஏற்படுகிறது. இதுவே குறைவற்ற ஆத்மார்ப்பணம்.
இனி சிந்தனைகளை இறைவனுக்கு நிவேதித்தல். தொடக்கத்தில் இது மனத்தை இறைவன் மீது ஊன்றச் செய்யும் முயற்சியாகும். ஏனென்றால் அமைதியற்ற மனித மனம் பலவற்றை எண்ணும், அவற்றில் ஈடுபடும். மேல்நோக்கித் திரும்பினாலும், அடிக்கடி உலக எண்ணங்கள் அதை இழுத்துக் கொண்டு ஓடிவிடும். இந்த நிவேதனத்தின் பயனாக மனம் இறைவனைப் பற்றியே சிந்திக்கும். மற்றவையெல்லாம் இரண்டாம் பட்சமாகவும் இறைவன் தொடர்பாகவுமே சிந்தனைக்கு வரும்.
இந்த நிவேதனத்திற்குப் பெரும்பாலும் ஒரு தூல வடிவத்தின் உதவியைப் பயன்படுத்துவதுண்டு. அதைவிட நெருக்கமாக இறையனுபவம் தரக்கூடிய ஏதாவது ஒரு மந்திரம் அல்லது திவ்ய நாமத்தைப் பயன்படுத்துவர். பக்தி சாஸ்திரம் வகுத்தவர்கள் மனத்தின் மூலம் இறைவனை நாடுவதில் மூன்று கட்டங்களைப்பற்றிப் பேசுகிறார்கள். முதலாவது இறைவனது நாமத்தை, அவனுடைய கல்யாண குணங்களை, அவனது லீலைகளைக் கேட்டல். (இதைச் சிரவணம் என்று கூறுவார்கள்). இரண்டாவது இவ்வாறு கேட்டவைகளைப்பற்றி அல்லது அவனது மூர்த்தத்தைப்பற்றி இடைவிடாது சிந்தித்தல். (இதை மனனம் என்பார்கள்). மூன்றாவது மனம் இலட்சியத்தின்மீது படிந்து நிற்றல். (இதைப் பிரத்தியாகரம் என்பார்கள்). மூன்றாவது நிலையின் மூலம் முழு சித்தி ஏற்படும். உணர்ச்சியும் ஒரு முனைப்பும் மிகத் தீவிரமாக இருந்தால் இவற்றின் மூலம் சமாதியும் கைகூடும்.
ஆனால், இவையெல்லாம் அவ்வளவு முக்கியமல்ல. மனத்தின் சிந்தனையில் தீவிரமான பக்தி இருக்க வேண்டும் என்பதொன்றே முக்கியமானது.
இது ஞான யோகத்தில் கூறப்படும் தியாகத்தைப்போலவே தோன்றினாலும் அதன் ஆழ்ந்த தன்மையில் வேறுபடுகிறது. அதன் உண்மைத்தன்மையில் இது - ஞானயோக தியாகத்தைப் போல் - அசைவற்ற சாந்தி தியானம் அல்ல. ஆனந்தத் தியாகம். இதன் நோக்கம் இறைவனில் கலந்துவிடுவதில்ல. இறைவனை நம்முள் கொண்டு வந்து அவனது சாந்நித்யத்தில் அல்லது அவனால் பற்றுண்பதில் உள்ள ஆழ்ந்த பரவசத்தில் தன்னை இழத்தலே. இதில் உண்டாகும் ஆனந்தம் இறைவனுடன் கலந்துவிடுவதால் வரும் சாந்தி அல்ல, இறைவனுடன் இணைவதால் வரும் பரவசம். மற்ற யோகங்களிற் போலவே இந்த யோகத்திலும் ஒருவன் இறைவனை எங்கும் எல்லாவற்றிலும் காண்பான். இந்த இறையனுபவம் அவனது அகச் செயல்களிலும் புறச்செய்கைகளிலும் வெளிப்படும். ஆனால், பக்தியோகத்தில் இந்த அனுபவங்களுக்கெல்லாம் ஆதாரமாகவுள்ள சக்தி இறைவனுடன் உணர்வு கலப்பதால் வரும் சக்தி. பக்தி யோகத்தில் மனிதன் தன்னை முற்றிலும் இறைவனுக்கு நிவேதிப்பதும், இறைவன் சாதகனை முற்றிலும் உடைமைப்படுத்திக் கொள்வதும் அன்பின் செயலாக நடைபெறுகிறது.
வைகறை - ஸ்ரீ அரவிந்த ஆசிரமத்தின் காலாண்டு வெளியீடு
மொழிபெயர்ப்பு : ச. மகாலிங்கம்.
(ஸ்ரீ அரவிந்தரின் Synthesis of Yoga : The way of Devotion-இல் எழுதியதைத் தழுவியது)
|