முதன்மை பக்கம் > ஆன்மிகம் > ஆன்மிகம் > அருளுரை
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
இந்து மதம்: சுவாமி விவேகானந்தர்
இந்து மதம் பற்றிய விவேகானந்தர் பேச்சின் நா‌ன்காம் பகுதி.

vivekanandar
webdunia photoWD
கடவுளின் கருணையால்தான் இந்தக் கட்டு அவிழும். அந்தக் கருணை தூயவர்களுக்குத்தான் கிடைக்கும். எனவே அவனது கருணையைப் பெறுவதற்குத் தூய்மை அவசியம் என்றாகிறது. அந்த கருணை எப்படிச் செயல்படுகிறது? தூய உள்ளத்தில் அவன் தன்னை வெளிப்படுத்துகிறான், ஆம், தூயவர்களும் மாசற்றவர்களும் இந்தப் பிறவியிலேயே கடவுளைக் காண்கின்றனர். அப்போதுதான் இதயக் கோணல்கள நேராகின்றன. சந்தேகங்கள் அகல்கின்றன. காரண காரியம் என்ற பயங்கர விதி அவர்களை அணுகுவதில்லை.

இதுதான் இந்து மதத்தின் மையமும், அதன் முக்கியமான அடிப்படைக் கருத்தும் ஆகும்.

இந்து, வார்த்தைகளிலும் கொள்கைகளிலும் வாழ விரும்பவில்லை. புலன் வசப்பட்ட சாதாரண வாழ்விற்கு அப்பாற்பட்ட வாழ்வுகள் உண்டு என்றால், அவன் அவற்றை நேருக்கு நேர் காண விரும்புகிறான். ஜடப்பொருள் அல்லாத ஆன்மா என்ற ஒன்று அவனுள் இருக்குமானால் அதனிடம் நேரே செல்ல விரும்புகிறான். கருணையே வடிவான, எங்கும் நிறைந்த இறைவன் ஒருவர் இருப்பாரானால் அவரை நேரே காண விழைகிறான். அவன் அவரைக் காண வேண்டும், அதுதான் அவனது எல்லா சந்தேகங்களையும் அகற்றும். ஆன்மா இருக்கிறது, கடவுள் இருக்கிறார் என்பதற்கு ஓர் இந்து ஞானி கொடுக்கக் கூடிய சிறந்த சான்று, நான் ஆன்மாவைக் கண்டுவிட்டேன், நான் கடவுளைக் கண்டுவிட்டேன் என்று அவர் கூறுவதுதான். நிறைநிலைக்கு அதுதான் ஒரே நியதி.

இந்து மதம் என்பது ஏதோ ஒரு கோட்பாட்டையோ கொள்கையையோ நம்புவதற்கான போராட்டங்களிலும் முயற்சிகளிலும் அடங்கிவிடாது. வெறும் நம்பிக்கை அல்ல, உணர்தலே, உணர்ந்து அதுவாக ஆதலே இந்து மதம்.

இடைவிடாத முயற்சியினமூலம் நிறைநிலை பெறுவதும் தெய்வத்தன்மை அடைவதும் தெய்வத்தை அணுகுவதும் அவனைக் காண்பதுமே அவர்களது நெறியின் ஒரே நோக்கம். தெய்வத்தை அணுகி, அவனைக் கண்டு, வானில் உறையும் தந்தையைப்போல் நிறைநிலை அடைவதுதான் இந்துக்களின் மதம். நிறைநிலை பெறும் ஒருவன் என்ன ஆகிறான்? அவன் எல்லையற்ற, முழுமையான பேரானந்தப் பெருக்கில் திளைத்து வாழ்கிறான், பேரின்பம் பெற எதனை அடைய வேண்டுமோ, அந்த ஆண்டவனை அடைந்து அவனுடன் பேரானந்தத்தில் திளைக்கிறான்.

இதுவரையில் எல்லா இந்துக்களும் ஒத்துப்போகின்றனர். இந்தியாவிலுள்ள எல்லா மதப் பிரிவினர்களுக்கும் இதுதான் பொதுவாக உள்ள மதம். நிறைநிலை என்பது எல்லையற்றது. எல்லையற்றது இரண்டாகவோ, மூன்றாகவோ இருக்க முடியாது. அதற்கு குணங்கள் இருக்க முடியாது. அது தனிப்பட்ட ஆளாக இருக்க முடியாது. எனவே ஆன்மா நிறைநிலையையும் எல்லையற்ற நிலையையும் அடையும்போது பிரம்மத்துடன் ஒன்றாகியே தீர வேண்டும். அது இறைவனை நிறைநிலையாக, ஒரே உண்மையாக, தானேயாக, தனது இயல்பாக, இருக்கின்ற ஒருவர் மட்டுமாக, தனியறிவு வடிவாக, பேரானந்த வடிவாக உணர்கிறது. தனித்தன்மையை இழந்து, ஒரு கட்டையைப் போன்றோ, கல்லைப் போன்றோ ஆகிவிடுவதுதான் இந்த நிலை என்றெல்லாம் படிக்கிறோம். காயம் படாதவன்தான் தழும்பைக் கண்டு நகைப்பான்.
1 | 2 | 3  >>  
மேலும்
இந்து மதம் - சுவாமி விவேகானந்தர்
இ‌ந்து மத‌ம் - சுவா‌மி ‌விவேகா‌ன‌ந்த‌ர்
‌இ‌ந்து மத‌ம் – சுவாமி விவேகானந்தர்
நமது ஜீவனின் ஏழு மையங்கள்
பரிமாணமும் அதிமன உணர்வும் – ஸ்ரீஅரவிந்தர்
"...அதைத் துணிவோடு எதிர்கொள்"- அன்னை