முதன்மை பக்கம் > ஆன்மிகம் > ஆன்மிகம் > அருளுரை
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
‌இ‌ந்து மத‌ம் – சுவாமி விவேகானந்தர்
வரலாற்றிற்கு முற்பட்ட காலத்திலேயே தோன்றி, இன்றும் நிலைத்து நிற்கின்ற மதங்கள் மூன்று. அவை இந்து மதம், சொராஸ்டிய மதம், யூத மதம் ஆகும். இவை பல கடுமையான அதிர்ச்சிகளுக்கு உட்பட்டும், இன்றும் நிலைத்திருப்பதன் வாயிலாகத் தங்கள் உள் வலிமையை நிரூபிக்கின்றன.

யூத மதம் கிறிஸ்தவ மதத்தைத் தன்னுடன் இணைத்துக் கொள்ளத் தவறியது மட்டுமின்றி, அனைத்தையும் வெற்றி கொண்டதும் தன்னிலிருந்து தோன்றியதுமான கிறிஸ்தவ மதத்தால், பிறந்த இடத்திலிருந்தே விரட்டி அடிக்கப்பட்டுவிட்டது. இன்று தங்கள் பெருமைக்குரிய மதத்தை நினைவுபடுத்த ஒரு சில பார்சிகள் மட்டுமே வாழ்ந்து வருகிறார்கள்.

இந்திய மண்ணில் ஒன்றன்பின் ஒன்றாக எத்தனையோ கிளை மதங்கள் உண்டாயின. அவை வேத நெறியின் அடித்தளத்தை உலுக்கிவிடுமோ என்று தோன்றியது. ஆனால் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டால், எப்படிக் கடல் சிறிது பின்னோக்கிச் சென்று, பின்னர் ஆயிரம் மடங்கு சீற்றத்துடன் பெருகி வந்து அனைத்தையும் வளைத்துக் கொள்கிறதோ, அதுபோல், எல்லா கிளை மதங்களும் ஆரம்ப ஆரவாரம் ஓய்ந்ததும் மிகப் பெரியதான தாய் மதத்தால் கவர்ந்திழுக்கப்பட்டு, அதனுள் இரண்டறக் கலந்தவிட்டன.

அறிவியலின் இன்றைய கண்டுபிடிப்புகள் எந்த வேதாந்தத்தின் எதிரொலிகள் போல் உள்ளனவோ, அந்த வேதாந்தத் தத்துவத்தின் மிக உயர்ந்த ஆன்மிகக் கோட்பாடுகள் முதல் பல்வேறு புராணக் கதைகள் கொண்ட மிகச் சாதாரண உருவ வழிபாட்டுக் கருத்துக்கள், பெளத்தர்களின் சூன்யவாதம், சமணர்களின் நாத்திக வாதம், ஆகிய அனைத்திற்கும் இந்த மதத்தில் இடம் உள்ளது.

அப்படியானால் ஒன்றுக்கொன்று மிகவும் வேறுபட்டு நிற்கின்ற இவை அனைத்தும் ஒன்று சேரும் பொது மையம் எங்கே இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது. ஒன்று சேரவே முடியாததுபோல் தோன்றுகின்ற இவை அனைத்தும் ஒருங்கிணைவதற்கான அடித்தளம் எங்கிருக்கிறது? இந்தக் கேள்விக்குத்தான் நான் விடை கூற முயலப் போகிறேன்.

அருள் வெளிப்பாடான வேதங்களிலிருந்து இந்துக்கள் தங்கள் மதத்தைப் பெற்றுள்ளனர். வேதங்களுக்குத் துவக்கமும் முடிவும் இல்லை என்பது அவர்கள் கூற்று. ஒரு நூலுக்குத் துவக்கமோ முடிவோ இல்லாதிருக்குமா, அது அபத்தம் என்று உங்களுக்குத் தோன்றும். ஆனால் வேதங்கள் என்று குறிப்பிடப்படுவது நூல்கள் அல்ல. வெவ்வேறு மக்களால், வெவ்வேறு காலங்களில் திரட்டி வைக்கப்பட்ட ஆன்மிக விதிகளின் கருவூலமே வேதங்கள். புவியீர்ப்பு விதி, அது கண்டறியப்படும் முன்னரே இருந்தது, மனித இனம் முழுவதும் அதை மறந்துவிட்டாலும் அது இருக்கும். அவ்வாறுதான் ஆன்மிக உலகின் விதிகளும். ஓர் ஆன்மாவிற்கும் இன்னோர் ஆன்மாவிற்கும், தனிப்பட்ட ஆன்மாக்களுக்கும் அனைத்து ஆன்மாக்களின் தந்தைக்கும் இடையே உள்ள தார்மீக, ஆன்மிக, நீதிநெறி உறவுகள், அவை கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னரும் இருந்தன, நாம் அவற்றை மறந்தாலும் இருக்கும்.

1 | 2 | 3  >>  
மேலும்
நமது ஜீவனின் ஏழு மையங்கள்
பரிமாணமும் அதிமன உணர்வும் – ஸ்ரீஅரவிந்தர்
"...அதைத் துணிவோடு எதிர்கொள்"- அன்னை
நாம் ஏன் ஒத்துப் போவதில்லை?
கடவுள் தத்துவம்
யோகம் சமர்ப்பணத்தின் மூலம் நடைபெறுகிறது-அன்னை