|
நமது ஜீவனின் ஏழு மையங்கள்
|
|
- ஸ்ரீ அரவிந்தர்
|
|
|
|
செவ்வாய், 1 ஏப்ரல் 2008( 11:49 IST )
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
ஏழு மையங்கள் அல்லது சக்கரங்கள் உண்டு : -
1) ஆயிரமிதழ்த்தாமரையென்னும் சகஸ்ரதல மையம் - தலையுச்சியில். 2) நெற்றியின் நடுவில் - அஜ்ன சக்கரம் - (சங்கற்பம், திருஷ்டி, செயலாற்றும் மனம்). 3) தொண்டையின் பின்னிருக்கும் மையம் - வெளிப்படுத்தும் மனம். 4) இதய கமலம் - உளவுணர்ச்சி மையம். இதன் பின்னே சைத்திய புருஷன் இருக்கிறது. 5) நாபி - மேல் பிராணன். 6) நாபிக்குக் கீழுள்ள மையம் - கீழ்ப்பிராணன். 7) மூலாதாரம் - தூல ஜீவன்.
இந்த மையங்களனைத்தும் உடலின் நடுவிலிருக்கின்றன. அவை முதுகுத் தண்டுவடத்துடன் பிணைந்திருப்பதாகக் கூறுவர். ஆனால், உணர்வு விழிக்கும்போது இவற்றின் இயக்கங்கள் தூல உடலில் நடப்பதாகத் தோன்றிய போதிலும் - உண்மையில் இவை சூக்கும தேகமென்னும் நுண்ணுடலில் இருக்கின்றன.
திருஷ்டி அல்லது காட்சியின் மையம் நெற்றியின் மத்தியில் கண்ணிமைகளுக்கிடையே இருக்கிறது. அது திறக்கும்போது ஒருவன் உள்காட்சியைப் பெறுகிறான்; பொருட்களின், மனிதரின் உள்ளுருவங்களையும் உள்சாயல்களையும் காண்கிறான்; பொருட்களையும் மனிதரையும் - வெளியிலிருந்து மட்டுமின்றி - உள்ளிருந்தும் புரிந்து கொள்ளத் தொடங்குகிறான்; பொருட்களின், மனிதரின் மீது உள் (யோக) முறையிலும் செயலாற்றவல்ல மனோசக்தியை வளர்க்கிறான். சாதாரண மன உணர்வல்லாத யோக உணர்வு, பெரும்பாலும் இத்திறவில்தான் தொடங்குகிறது.
இதய மையத்தில் இரு தாமரைகள் இருப்பதாக நான் கேள்விப்பட்டதில்லை; ஆனால் அது இரு சக்திகளின் இருக்கையாகும் - முன்னாள் மேல்பிராணன் அல்லது உளவுணர்ச்சி ஜீவன், பின்னால் மறைந்திருக்கும் சைத்திய புருஷன்.
வெவ்வேறு மையத் தாமரைகளின் நிறங்களும், இதழ்களின் எண்ணிக்கையும், கீழிருந்து மேலாக, பின்வருமாறு : - (1) மூலாதாரம் அல்லது தூல உணர்வு மையம், நான்கு இதழ்கள், சிவப்பு; (2) கீழ்வயிற்று மையம், ஆறு இதழ்கள், ஆழ்ந்த நீலச் சிவப்பு; (3) நாபி மையம், பத்து இதழ்கள், செங்கருநீலம்; (4) இதய மையம், பன்னிரெண்டு இதழ்கள், பொன்னிற இளஞ்சிவப்பு; (5) தொண்டை மையம், பதினாறு இதழ்கள், சாம்பல் நிறம்; (6) கண்ணிமைகளுக்கு நடுவே நெற்றி மையம், இரு இதழ்கள், வெண்மை; (7) தலைக்குமேல் ஆயிரமிதழ்த் தாமரை, பொன்னொளியால் சூழப்பட்ட நீலம். நம் யோகத்தின்படி, அவற்றின் செயல்களாவன : - (1) தூல உணர்வையும் அடிமன உணர்வையும் ஆளுதல்; (2) சிறு பிராண இயக்கங்கள், அற்ப ஆசைகள், வெறிகள், ஆர்வங்கள், சிறு புலனியக்கங்கள் இவற்றை ஆளுதல்; (3) பெரு உயர்ச்சிக்திகளையும் உணர்ச்சிகளையும், பேராசையின் இயக்கங்களையும் ஆளுதல்; (4) சைத்திய புருஷனைத் தன்பின்னே ஆழத்தில் கொண்டுள்ள மேல் உளவுணர்ச்சி ஜீவனை ஆளுதல்; (5) மனவியக்கங்கள், மனசக்திகளின் வெளிப்பாட்டை ஆளுதல்; (6) எண்ணம், சங்கற்பம், காட்சி இவற்றையாளுதல்; (7) சிந்திக்கும் உயர் மனத்தின் மீதும் ஒளிர்மனத்தின் மீதும் ஆட்சி செலுத்தி, மேலே நேர்மனத்திற்கும் மேல் மனத்திற்கும் திறத்தல். சிலர், மூளையே இந்த ஏழாவது மையம் என்பர், ஆனால் அது சரியன்று - மூளை, ஆயிரமிதழ் மையத்திற்கும் நெற்றி மையத்திற்கும் இடையே தொடர்பாக உள்ள வழியேயாகும். ஆயிரமிதழ் மையம் உடலிலில்லை. சூனியம் போன்ற மேலிடத்திலிருக்கிறது என்பதனாலும், தலைக்கு மேலெழுவோர் முதலில் ஆன்மாவின் மோனத்திலுள் நுழைவதாலும், சிலர் இம்மையத்தை சூனியம் என்பர்.
மொழி பெயர்ப்பு : - ச. மகாலிங்கம்
இலட்சியம் - அரவிந்தர்
உன்னுள் உள்ள வலிமையைத் தெளிவாக உணர முயல். அதை முன்னுக்குக் கொண்டு வர முயல். நீ செய்வதெல்லாம் உனது சொந்த செயலாயில்லாமல், உன்னுள் உள்ள உண்மையின் செயலாயிருக்கட்டும். நீ உயிரோடிருக்கும் ஒவ்வொரு மணி நேரமும் அவ்வுண்மையின் சாந்நித்தியத்தால் ஒளிபெறட்டும், உனது ஒவ்வொரு சிந்தனையும் அந்த ஒரே ஊற்றிலிருந்து தெய்வீக ஊக்கம் பெறட்டும்; உனது திறன், நற்குணம், பண்பு எல்லாம் உன்னுள் கோயில் கொண்டுள்ள அந்த அமரசக்தியின் பணிக்கே ஆகட்டும். இதற்காக முயல்வாயாக.
நன்றி : வைகறை (ஸ்ரீஅரவிந்த ஆசிரமக் காலாண்டு வெளியீடு) ஆகஸ்டு, 15
|
|
|
|
|