மனித இனம் முழுவதையும் அதிமனமயமாக்குவது தற்போதைய உடனடி நோக்கமல்ல, உலகப் பரிணாமத்தில் அதிமன உணர்வு என்ற தத்துவத்தை நிலை நாட்டுவதே நோக்கம். இதைச் செய்துவிட்டால் தேவையானவற்றை எல்லாம் அதிமன சக்தியே படைத்துக் கொள்ளும். ஆகவே நமது பணி பரவ வேண்டும் என்பது இப்போது முக்கியமல்ல. ஒரு சிலர் விஷயத்திலாயினும் சரி, இந்த உருமாற்றம் நிறைவேற வேண்டும், அதுவே முக்கியமானது. கஷ்டமான வேலை அதுதான்.
உடலின் உருமாற்றம் பூர்த்தியானால் அது மரணத்தை வென்றதாகும். அப்படியென்றால் என்றென்றைக்கும் அதே உடலை வைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. உடலை மாற்ற நினைத்தால்தானே தனக்கு வேறொரு புதிய உடலைப் படைத்துக் கொள்ளலாம். ஆனால் அதற்கான வழிமுறைகள் பற்றி இப்பொழுது கூற முடியாது. இப்போதுள்ள முறை சடப்பிறப்பு, சூக்கும அறிவுடையவர்கள் ஒரு காலத்தில் இம்முறை தேவையற்றுப் போகும் என்று கூறியுள்ளார். ஆனால் இந்த விஷயத்தைத் தீர்மானிக்க வேண்டியது விஞ்ஞானப் பரிணாமமே.
அதிமனத்தைப் பற்றிய கேள்விகளுக்குப் பயனுள்ள முறையில் இப்பொழுது பதிலளிக்க முடியாது. மனம் புரிந்து கொள்ளும் வகையில் விஞ்ஞானத்தை வருணிக்க முடியாது. ஏனென்றால் வருணித்துக் கூறுவதென்றால் மனத்தின் மொழியில் கூற வேண்டும். மனம் அதை தன் போக்கிலேயே புரிந்து கொள்ளும், உட்பொருளைக் கண்டு கொள்ளாது. ஆகவே அம்முறய்சி வீண் கால விரயமும் சக்தி விரயமுமே. நேரத்தையும் சக்தியையும் ஜீவன் இயற்கை இவ்விரண்டையும் சைத்தியமயமாக்குதல், ஆத்மிகமயமாக்குதல் ஆகிய ஆரம்ப வேலையில் செலவிடுதலே பயனுள்ள செயலாகும். இந்த இரண்டையும் செய்யுமுன் விஞ்ஞானமயமாக்குதல் சாத்தியமில்லை. முதலில் சைத்திய புருஷனால் வழிகாட்டப்பட்ட செயல் இயற்கை முழுவதும் செயல்முகமான ஆன்மீக ஒளி, சாந்தம், தூய்மை, ஞானம், பக்தி இவற்றால் தன்னை நிரப்பட்டும், அதன்மேல் அது இடைப்பட்ட ஆன்மீக தளங்களின் (உலகங்கள்) அநுபவத்தைப் பெற்று, அவற்றை அறிந்து, உணர்ந்து அவற்றிற்குரிய உணர்வில் செயல்படட்டும், அதற்குப் பின் இறுதியாக அதிமன உருமாற்றம் பற்றிப் பேசலாம்.
விளக்கம் :- முழு விஞ்ஞான உருமாற்றம் அதிமனமயமாதல் என்பது மூன்று படிகளில் நிறைவேறுகிறது. முதலாவயது சைத்திய உருமாற்றம் அல்லது சைத்திய மயமாதல். அதற்கு இதயத்தில் ஒரு முனைப்பட்டு சைத்திய புருஷனை உணர்வது இன்றியமையாத அடிப்படை. சைத்திய புருஷனின், அந்தராத்மாவின், குண விசேஷங்களாவன - மங்களம், எழில், உண்மை, நேர்மை, அன்பு, பக்தி, நயம் இவைகள். சைத்திய புருஷனை அடைந்த பின், நமது முழு இயற்கையையும் (சுபாவத்தையும்) சைத்தியமயமாக்கும் வேலையில் ஈடுபட வேண்டும், அதாவது நமது இயற்கை சைத்திய புருஷன் அல்லது அந்தராத்மா தன்னை வெளிப்படுத்திக் கொள்வதற்கு ஏற்ற கருவியாக மாற வேண்டும். நம்முடைய பேச்சுகள், உணர்ச்சிகள், படைப்புகள், செயல்கள் எல்லாம் மங்களம் எழில், உண்மை, நேர்மை, நயம் இவைகள் நிரம்பியனவாக விளங்க வேண்டும், இவைகளுக்கு நேர்மாறான குணங்களான பகைமை, வெறுப்பு, குரோதம், பேராசை, சுயநலம், அகங்காரம், தீமை, விரோதம், கல்நெஞ்சம் இவைகளுக்கு நம்மிடம் சிறிதும் இடம் தராமல் விழிப்புள்ள உணர்வுடன் இருக்க வேண்டும். பின் கூறப்பட்டவையெல்லாம் அஞ்ஞானம் நிறைந்தவை, அதெய்வீகமானவை, நமது ஆன்ம வளர்ச்சிக்கு இடையூறாக உள்ளவை. சைத்திய உணர்வுள்ளவர்கள், சைத்திய வளர்ச்சியடைந்தவர்கள் இயல்பாகவே இவைகளை விரும்பமாட்டார்கள். ஆன்மீக மார்கத்தில் முன்னேற்றமடைய விரும்புபவர்கள் எல்லாம் இவைகளை அறவே விலக்கும் சாதனையில் ஈடுபட வேண்டியது அவசியம். இது முதல் படி.
|