(இப்புவியின் திருவுருமாற்றத்திற்கு அத்யாவசியமானது என்று ஸ்ரீ அரவிந்தர் கூறிய அதிமன வெளிப்பாடு (Supramental Manifestation) 1956 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 29 ஆம் தேதி நிகழ்ந்தது. அந்த உன்னத நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் புதுவை ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது)
நமது வேலை புவி மீது புதியதோர் உணர்வை, அதிமன உணர்வை (Supramental Consciousness) ஸ்தாபித்தல் - அந்த திவ்ய உணர்வு எல்லையற்ற வகைகளில் வெளிப்பட முடியும். படைப்பில்தான் முடிவற்ற வளர்ச்சி உண்டு, படைப்புக்கு அப்பால் வளர்ச்சியென்பது இல்லை. உடற்சட்டையிலிருந்து ஆத்மா விடுதலையடைவதே நோக்கம் என்றால் அதற்கு அதிமனமயமாதல் தேவையில்லை.
ஆன்மீக முக்தியும் நிர்வாணமும் போதுமானது. வேறு உயர்ந்த உலகங்களுக்குச் செல்லும் நோக்கமிருந்தாலும் விஞ்ஞானமயமாதல் தேவையில்லை. அவ்வுயர் உலகங்களின் அதி தேவதைகள் மீது பக்தி செலுத்துவதன் மூலம் அங்குச் செல்லலாம். ஆனால் அது வளர்ச்சி ஆகாது. பிற உலகங்களெல்லாம் மாறா உலகங்கள். ஒவ்வொன்றும் ஒருவகை. ஒவ்வொன்றிற்கும் அதற்குரிய தர்மம் உண்டு, இவற்றில் எப்போதும் எவ்வித மாறுதலும் ஏற்படாது, பூமியில்தான் பரிணாமம் உண்டு, ஆகவே வளர்ச்சிக்குரிய இடம் பூமிதான். பிற உலகிலுள்ள ஜீவர்கள் ஓர் உலகிலிருந்து முன்னேறி இன்னொரு உலகிற்குச் செல்வதில்லை. அவை தங்கள் இனப்படி மாறாது ஒரே இயல்பாயிருக்கும்.
சுத்தாத்வைத வேதாந்தி எல்லாம் பிரம்மன், வாழ்வு ஒரு கனவு, ஒரு பொய், பிரம்மன் ஒன்றே உள்ளது என்கிறான். நிர்வாணம் அல்லது முக்தி அடைந்தால் உடல் விழும் வரைதான் வாழ்வு - அதன்பின் வாழ்வு என்று ஒன்று இல்லை.
அவர்களுக்கு உருமாற்றம் தேவையற்றது. ஏனெனில் (அவர்கள் கொள்கைப்படி) மனம், உயிர், உடல் எல்லாம் ஒரு பொய், ஒரு மாயை - குணதொந்தமற்ற ஆத்மன் அல்லது பிரம்மன் மட்டுமே உண்மை. வாழ்வு தொந்தங்களுடையது, சுத்த ஆத்மனில் வாழ்வு, தொந்தங்கள் எல்லாம் மறைந்து போகின்றன. ஒரு மாயையை உருமாற்றம் செய்து என்ன பயன், அதை உருமாற்றத்தான் எப்படி முடியும், அது எவ்வளவுதான் உருமாறினாலும் மாயை அல்லாமல் வேறொன்றாக இருக்க இயலாதே? "நிர்வாண வாழ்வு" என்று அவர்கள் கொள்கையில் இல்லை.
ஒரு சில யோக வழிகள்தாம் அஞ்ஞானத்தை ஞானமாக மாற்றுவது தவிர வேறு வகையான உருமாற்றத்திற்காக முயல்கின்றன. ஆனால் உருமாற்றம் பற்றிய கருத்தில் வேறுபாடு உண்டு - தெய்வீக ஞானம், தெய்வீக சக்தி, தெய்வீக தூய்மை, மாசற்ற அற வாழ்வு, தெய்வீக அன்பு இப்படிப் பல.
இயற்கையின் உருமாற்றத்தை விரும்பாத அஞ்ஞானத்தை வெல்வதே காரியம். அதை வென்றால் பின் பழைய ஆன்மீகக் கருத்துக்கள் ஒரு தடையாக இரா.
|