|
"...அதைத் துணிவோடு எதிர்கொள்" அச்சத்தை வெல்லும் வழி அன்னை அச்சத்தை வெல்வதற்குச் சிறந்த வழிகளில் ஒன்று, நீ எதைக் கண்டு அஞ்சுகிறாயோ அதைத் துணிவோடு எதிர்கொள்வதுதான். நீ எந்த அபாயத்தை எண்ணி அஞ்சுகிறாயோ அதை நேருக்கு நேர் சந்திக்கும்போது நீ அஞ்சுவதில்லை, அச்சம் மறைந்துவிடுகிறது. யோக நோக்கிலிருந்து, சுய கட்டுப்பாட்டின் நோக்கிலிருந்து அச்சத்தைப் போக்குவதற்கு மருந்தாகச் சிபாரிசு செய்யப்படுவது இதுதான். பழைய இரகசிய சம்பிரதாயங்களில், குறிப்பாக எகிப்தில், சூக்கும சித்திகள் கைவர முயல்வோர் முற்றிலும் மரண பயம் அற்றவர்களாக இருக்க வேண்டும் என்பது ஒரு நிபந்தனையாகும். அதற்காக அந்த நாளில் என்ன செய்வார்கள் என்றால், புதிதாகச் சேர்ந்துள்ள சீடனை, அவன் செத்துப்போய் விட்டதைப்போல், கல் சவப்பெட்டியில் சில நாட்கள் அப்படியே கிடக்கும்படி போட்டுவிடுவார்கள். உணவின்றியோ, மூச்சு முட்யோ அவன் இறந்துபோக விடமாட்டார்கள் என்பது உண்மை. ஆனாலும் அவன் இறந்துபோய்விட்டதைப்போல் சவப்பெட்டியில் கிடக்கவேண்டும். இந்த முறையில் அச்சமெல்லாம் போய்விடுவதாகத் தெரிகிறது. அச்சம் உண்டாகும்போது உணர்வை, ஞானத்தை, சக்தியை ஒளியைப் பாய்ச்ச முடியுமானால் அச்சத்தை அடியோடு அகற்றிவிடலாம்.
***
அதன் ஆழ்ந்த பொருளில் உண்மையான அஞ்சாமை என்பது எதையும், வாழ்க்கையில் நேரக்கூடிய எதையும், சிறிய விஷயங்கள் முதல் பெரிய விஷயங்கள் வரை, சாதாரண அன்றாட வாழ்க்கைக்குரிய விஷயங்கள் முதல் ஆன்மீக விஷயங்கள் வரை, நடுக்கமின்றி, இதயம் படபடக்காமல், நரம்புகளில் பதட்டமின்றி, ஜீவனின் எந்தப் பாகத்திலும் கிளர்ச்சியில்லாத முறையில் எதிர்கொள்ள முடிவதுதான். இடைவிடாத இறைவனின் சாநித்திய உணர்வுடன், முற்றிலும் உன்னை இறைவனுக்கு அர்ப்பணித்து, ஜீவன் முழுவதும் அந்தச் சங்கற்பத்தில் ஒருங்கிணைந்து எல்லாவற்றையும் எதிர்கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால் நீ வாழ்வில் வெகு வேகமாக முன்னேறிச் செல்லலாம், எதை வேண்டுமானாலும் எதிர்கொள்ளலாம். நடுக்கமின்றி, அதிர்ச்சியின்றி எதிர்கொள்ள வேண்டும் என்றேன். ஒருவன் விசேஷ அருளுடன் பிறந்திருக்காவிட்டால், பிறவியிலேயே இத்தன்மையைப் பெற்றிருக்காவிட்டால், நீண்ட முயற்சியின் மூலமே இந்த நிலையை அடைய முடியும். பிறவியிலேயே அப்படி இருப்பது மிக மிக அருமை.
***
உன்னால் துன்பத்தைத் துணிவோடு, பொறுமையோடு, இறைவனுடைய அருளில் அசைக்க முடியாத நம்பிக்கையோடு எதிர்கொள்ள முடியுமானால், துன்பம் வரும்போது அதைத் தவிர்க்க முயலாமல், எல்லாப் பொருட்களின் நடுப்பகுதியாக உள்ள ஒளிபொருந்திய உண்மையை, மாறாத களிப்பை கண்டுபிடிக்க வேண்டும் என்னும் உறுதியுடனும், ஆர்வத்துடனும் அதனுட்புகுந்து அந்த ஆனந்த அனுபவத்தைப் பெறுவாயானால், மனநிறைவைத்தரும், திருப்தியைத்தரும், பல ஆன்ம அனுபவங்களைவிட அது அதிக நேரான, குறுக்கு வழியாக இருக்கும். வேதனை, அதைத் தாங்கிக் கொள்ளவும் நம்மை நசுக்குகிற அதை எதிர்த்து நிற்கவும், நம்மை ஒருமுனைப்படச்செய்கிறது. அதனால் அது நம்மை ஓர் ஆழ்ந்த உண்மைக்கு இழுத்து வருகிறது. வேதனை ஏற்படும்போதுதான் ஒருவன் அதிக எளிதாக உண்மையான பலத்தை மீண்டும் கண்டுபிடிக்கிறான். அவன் பலமடைகிறான். வேதனை ஏற்படும்போதுதான் ஒருவன் அதிக எளிதாக உண்மையான நம்பிக்கையை மீண்டும் கண்டுபிடிக்கிறான் - எல்லா வேதனைகளையும் கடந்த ஒன்றில், எல்லா வேதனைகளுக்கும் அப்பால் உள்ள ஒன்றில் நம்பிக்கை.
***
மொழி பெயர்ப்பு - ச. மகாலிங்கம்
|