முதன்மை பக்கம் > ஆன்மிகம் > ஆன்மிகம் > அருளுரை
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
யோகம் சமர்ப்பணத்தின் மூலம் நடைபெறுகிறது-அன்னை
அன்னை
webdunia photoWD
யோகம் என்றால் இறைவனுடன் ஐக்கியமடைதல் என்பது பொருள். இந்த ஐக்கியம் சமர்ப்பணத்தின் மூலம் நிறைவேறும் - நீ உன்னை இறைவனுக்குக் கொடுப்பதன் அடிப்படையில் அது நிகழும்.

தொடக்கத்தில் இந்தச் சமர்ப்பணத்தைப் பொதுவான முறையில் முடிவாகக் கொடுத்துவிட்டது போல் செய்வாய். நீ இப்படிச் சொல்வாய் : "நான் இறைவனின் தொண்டன், என்னுடைய வாழ்வை முற்றிலுமாக இறைவனுக்கே கொடுத்துவிட்டேன். இனி எனது முயற்சியெல்லாம் தெய்வ வாழ்வை அடையும் பொருட்டாகவே இருக்கும்."

ஆனால் இது முதற்படியே; இது போதாது. இந்த முடிவை எடுத்துவிட்டபின், உனது வாழ்வு முழுவதும் இறைவனுக்கே கொடுக்கப்படும் என்று நீ முடிவு செய்துவிட்டபின், நீ ஒவ்வொரு கணமும் அதை நினைவில் வைத்திருந்து, உனது வாழ்வின் ஒவ்வொரு சிறு விஷயத்திலும் அதை நிறைவேற்றி வைக்க வேண்டும்; நீ இறைவனுக்குச் சொந்தமானவன் என்பதை நீ ஒவ்வொரு அடியிலும் உணர வேண்டும்.

நீ எதைச் சிந்தித்தாலும், எதைச் செய்தாலும் இறை உணர்வே உன் மூலம் செயல்படுகிறது என்பது உனது இடைவிடாத அனுபவமாக இருக்க வேண்டும். உனது என்று சொல்லிக்கொள்ள உன்னிடம் இனி ஒன்றுமே இல்லை; எல்லாம் இறைவனிடமிருந்து வருவதாகவே நீ உணர்வாய், இறைவனிடமிருந்து பெற்றதை அவனுக்கே திருப்பிக் கொடுத்துவிட வேண்டும்.

இதை நீ அனுபவபூர்வமாக அறியும்போது பொதுவாக நீ அதிகக்கவனமோ அக்கறையோ செலுத்தாத மிகச்சிறிய விஷயம, இனி அற்பமானதாகவோ பொருளற்றதாகவோ இருக்காது; அது மிகவும் பொருள் பொதிந்ததாகிவிடும்; புதிய எல்லைகளுக்கு அது கதவு திறந்துவிடும். உன்னுடைய பொதுவான சமர்ப்பணத்தை ஒவ்வொரு சிறு விஷயத்திலும் நீ இவ்வாறு நிறைவேற்றி வைக்க வேண்டும். இடைவிடாது இறைவனுடைய சாந்நியத்தில் வாழ்; இந்த சாந்நித்தியமே உன்னை இயக்குகிறது. நீ செய்வதையெல்லாம் செய்விக்கிறது என்னும் உணர்வுடன் வாழ்; உனது மனச்செயல்கள் ஒவ்வொன்றையும் மட்டுமல்லாமல், ஒவ்வொரு சிந்தனையையும், உணர்ச்சியையும் மட்டுமல்லாமல், உணவு கொள்வது போன்ற சாதாரணப் புறச் செயல்களையும் அர்ப்பணி; நீ உண்ணும்போது இறைவனே உன்மூலம் உண்பதாக நீ உணர வேண்டும்.

இவ்வாறு உனது இயக்கங்களையெல்லாம் ஒரே வழியில் கூட்டிச் சேர்க்க முடியும்போது, உன்னிடம் பிரிவினைக்குப் பதில் ஒருமைப்பாடு இருக்கும். உனது இயற்கையின் ஒரு பகுதி இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டும், மீதப்பகுதி தனது சாதாரண காரியங்களில் மூழ்கிச் சாதாரண வழிகளில் போய்க்கொண்டும் இருப்பது என்பது இனி இல்லை; உனது வாழ்வு முழுவதும் எடுத்துக் கொள்ளப்பட்டு, ஒரு முழுமையான உருமாற்றம் உன்னிடம் படிப்படியாக நிகழும்.

பூரண யோகத்தில் வாழ்வு முழுவதும், மிகச்சிறிய அம்சம் வரை, உருமாற்றம் செய்யப்பட வேண்டும், தெய்வத்தன்மை பெறச் செய்யப்பட வேண்டும். இங்கு முக்கியத்வம் இல்லலாதவை அலட்சியப்படுத்தக்கூடியவை என ஒன்றுமே இல்லை. "நான் தியானத்தில் இருக்கும்போது, தத்துவ நூல்களைப் படித்துக் கொண்டோ இந்த உரையாடல்களைக் கேட்டுக் கொண்டோ இருக்கும்போது ஒளிக்குத் திறந்திருக்கும் இந்த நிலையில் இருப்பேன், அதை அழைப்பேன்; ஆனால் உலவப்போனாலோ, நண்பர்களைப் பார்க்கப்போனாலோ அதைப்பற்றி முற்றிலும் மறந்துவிடக்கூடும்" என்று நீ சொல்ல முடியாது. இந்த மனப்போக்கை நீ விடாதிருந்தாயானால் நீ மாற்றமடையாமலேயே இருப்பாய். ஒரு போதும் உண்மையான ஐக்கிய நிலையை அடையமாட்டாய், எப்பொழுதும் நீ பிளவுபட்டே இருப்பாய். அதிகபட்சமாக நீ பெறக்கூடியது இப்பெருவாழ்வின் அரைகுறைத் தோற்றங்களே.

ஏனெனில், தியானத்தின்போது அல்லது உள் உணர்வில் உனக்குச் சில அனுபவங்களும் அனுபூதிகளும் வரக்கூடுமெனினும், உனது உடலும் புறவாழ்வும் மாற்றம் அடையாமலேயே இருக்கும். உடலையும் புறவாழ்வையும் சட்டைபண்ணாத உள் அனுபவத்தால் அதிகப் பயனில்லை;ஏனெனில் அது உலகை இப்போதுள்ள நிலையிலேயே விட்டுவிடுகின்றது.

மொழி பெயர்ப்பு :- ச. மகாலிங்கம்.
நன்றி : வைகறை
(ஸ்ரீஅரவிந்த ஆசிரமக் காலாண்டு வெளியீடு)
மேலும்
பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ணரின் அருள் துளிகள்!
நமது யோக பாதை - ஸ்ரீ அர‌வி‌ந்த‌ர்!
மார்கழித் திருப்பாவை பாடல் 29
மார்கழித் திருப்பாவை பாடல் 28
மார்கழித் திருப்பாவை பாடல் 27
மார்கழித் திருப்பாவை பாடல் 26