எல்லாக் கஷ்டங்களையும் வெல்ல முடியும். ஆனால் அதற்கு ஒரு நிபந்தனை உள்ளது. யோக பாதைக்கு உண்மையுள்ளவனாக இருக்க வேண்டும். யோக வழியை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கட்டாயமேதுமில்லை. ஆனால் அதை ஏற்றுக் கொண்டபின் அதன்படி நடக்க வேண்டும், இல்லை என்றால் முன்னேற்றத்தையோ வெற்றியையோ எதிர்பார்க்க முடியாது.
யோக பாதை கடினமானது, ஆபத்தானது. அது தீரர்களுடைய, ஆன்ம தீரர்களுடைய வழி, பலவீனர்களுக்கான வழி அன்று.
யோகத்தின் உண்மையான அடிப்படையை நினைவிற்கொள்.
இப்போதுள்ள பக்தி மார்க்கத்தில் காணப்படும் அளவுமீறிய உணர்ச்சிவசப்படுதல் அதன் அடிப்படையாகாது. ஆனாலும் அதில் பக்தி உண்டு. பக்தி வேறு வகையானது. அது சமதையிலும் ஆத்ம சமர்ப்பணத்திலும் கால்கொண்டது.
தனது சொந்த இச்சையை வற்புறுத்தாமல் கடவுளது இச்சைக்குக் கீழ்ப்படிதலே முதல் மந்திரம். எந்த வகையான புரட்சியோ, எதிர்ப்போ, கட்டுக்கடங்காத பொறுமையின்மையோ இருக்குமானால் பூரணமான ஆத்ம சமர்ப்பணம் இருக்க முடியாது.
எதிர்ப்பு, பொறுமையின்மை இவை எப்பொழுதுமே ஜீவனில் ஏதோ ஒரு பகுதி தன்னைக் கடவுளுக்கு அர்ப்பணிக்கவில்லை, அது கடவுளுக்குக் கீழ்ப்படியவில்லை, கடவுள் தனக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று வற்புறுத்துகிறது என்பதைக் காட்டும்.
சாதாரண பக்தி மார்க்கத்தில் இவற்றிற்கெல்லாம் இடமிருக்கலாம், ஆனால் அத்யாத்ம யோகத்தில் இவற்றிக்கு அனுமதி இல்லை.
இதயத்திலோ பிராணனிலோ எதிர்ப்பு, பொறுமையின்மை இவை வரலாம், வரும்- இன்னும் அபூரணமாகவும், மாசுடையவையாகவும் இருக்கும்போது, ஆனால் அப்படி வரும்போது புத்தியிலுள்ள இச்சா சக்தியும், நம்பிக்கையும் அவற்றை விலக்கித்தள்ள வேண்டும், அவற்றின்படி செயல்படக் கூடாது.
இச்சா சக்தி அவைகளுக்கு இணங்கினால், அவற்றை அங்கீகரித்தால், ஆதரவு தந்தால், நீ உன்னுள்ளே உள்ள விரோதியின் பக்கம் சேர்கிறாய் என்று அர்த்தம். இவ்வாறு செய்யப்படும் ஒவ்வொரு தடவையும் விரோதியின் பலம் அதிகரிக்கும், சுத்தி ஒத்திப் போடப்படும்.
இது கடினமான பாடம்தான். ஆனால், ஒவ்வொரு யோகியும் இந்தப் பாடத்தைக் கற்க வேண்டும். நன்கு கற்க வேண்டும்.
இதன் தத்துவத்தைச் சரிவரத் தெரிந்து கொள்வதே கடினமானது, மிகக் கடினமானது, இந்தவகையில் கீழியல்பை முழுமையாக வெல்வது அதைவிட நூறு மடங்கு கடினமானதாகும்.
உனது பகைவனான 'ஆசை'க்கு ஒருபோதும் இடம் கொடாதே. யோகநாதனுடைய சுத்திகரிக்கும் வேலையில் உணர்வுடனும் பூரணமாகவும் உதவு.
இவையே நமது யோகத்தின் மந்திரங்களாகும். யோகத்திலேயே அதிகக் கடினமான பகுதி சுத்திதான், மற்றெல்லாம் நடப்பதற்கான நிபந்தனை அது. அதில் வெற்றியடைந்தால், அதுவே உண்மையான வெற்றியாகும். அந்த வெற்றி கிடைத்துவிட்டால் உறுதியான அடிப்படை கிடைத்தாயிற்று, அதன் மேல் கட்டிடத்தை எழுப்புவது எளிதாயிருக்கும். கட்டும் வேலைக்குக் கொஞ்ச காலமோ அதிக காலமோ ஆகலாம். ஆனால் வேலை அமைதியாகவும் ஒரே சீராகவும் நடக்கும்.
|