நமது யோக பாதை - ஸ்ரீ அரவிந்தர்!
நமது பணி முழுமையான ஒரு பணி. சாராம்சத்தில் அது சமயப் பணியும் ஆன்மிகப் பணியும் ஆகும். ஆனால், அது வாழ்க்கை முழுவதிலும் செயல்பட வேண்டிய ஒன்று. நமது முக்கிய இலட்சியம் சாதாரண மனிதனைத் தெய்வ மனிதனாக ஆக்குவது.
நமது சாதனை ஞானமும் பக்தியும் இணைந்த கர்ம யோகத்தை அடிப்படையாகக் கொண்டது. நமது முயற்சிகளுக்குக் குறுக்கே நின்று கலியுக சக்திகள் நமது முயற்சிகளைப் பயனற்றுப் போகச் செய்கின்றன. நமது பழைய கர்மமும் பிற மக்களுடைய பழைய கர்மமும் அந்தக் கலியுக சக்திகளுக்குத் துணை செய்கின்றன. அந்தக் கர்மத்தை நாம் ஒழிக்க வேண்டும். நாம் வெற்றியினால் பொங்கிவிடவோ தோல்வியினால் சோர்ந்து விடவோ கூடாது.
உலகம் முழுவதையும் புதுப்பிப்பதற்காக நாம் உழைத்துக் கொண்டிருக்கிறோம். அதன் விளைவாக இப்போதுள்ள ஐரோப்பிய நாகரிகம்போய் அதனிடத்தில் ஓர் ஆன்மிக நாகரிகம் வரும்.
அந்த மாற்றத்தில் ஆசிய இனங்களின், குறிப்பாக இந்தியாவின் புத்துயிர்ப்பு முக்கியமான அம்சமாக இருக்கும்.
விரிவானதொரு வேதாந்த இயக்கத்தின் மூலமே புத்தெழுச்சி சாத்தியமாகும்.
ஒரு வலுவான ஆன்மிக அடித்தளம் தேவை. உள்ளே நாம் எப்படி இருக்கிறோமோ அதற்கு ஏற்றபடியே நமது புறக்கிரியைகளும் கர்மங்களும் அமையும்.
அன்னை தனது வேலைகளைச் செய்ய தூய ஆதாரத்தையைக் கோருகிறாள். ரஜோ குண ஆத்திரத்தால் நாம் அவரை அவசரப்படுத்தினால், அதனால் வெற்றி தாமதமாகுமே தவிர விரைவில் வந்துவிடாது.
எல்லாவற்றிலும் ஈஸ்வரனையும் பிரம்மனையும் பார்க்க முயல்வோம்.
புத்தருடைய நாளிலிருந்து ஒவ்வொரு துறவு இயக்கமும் இந்தியாவை மேன்மேலும் பலவீனப்படுத்தியுள்ளது. அதற்கான காரணம் மிகவும் வெளிப்படை.
வாழ்வைத் துறப்பது வேறு, வாழ்வை, தனிமனித வாழ்வை, தேசிய வாழ்வை, உலக வாழ்வை மேலும் மேன்மையடையவும் தெய்வத்தன்மையடையவும் செய்வது வேறு.
நாடு முழுவதும் இந்த இரண்டு இலட்சியங்களில் ஏதாவது ஒன்றைப் பின்பற்றும்போது மற்ற இலட்சியம் பலவீனப்படுவதைத் தடுக்க முடியாது. நாட்டின் மிகச் சிறந்த மனிதர்கள், சிரேஷ்டர்கள் துறவிகளாகிவிட்டபின் தேசம் அதிக மேன்மையும் வலிமையும் அடைவது சாத்தியமில்லை.
அகங்காரத்தைத் துறந்து வாழ்க்கையில் கடவுளை ஏற்றுக் கொள்வதே நமது யோகத்தின் போதனை ஆகும்- வேறு துறவு கிடையாது.
கடவுளின் மீது நம்பிக்கை கொண்டு செயலாற்று, அத்யாத்ம யோகத்தை வாழ்க்கையில் கொண்டு வரும் முயற்சியே இன்றுள்ள முதல் வேலை, எல்லாவற்றிலும் முக்கியமான வேலை.
இந்தக் கருத்தை மட்டும் பரப்பினால் போதாது. உண்மையான யோகிகள் தோன்ற வேண்டும். தனி மனிதன் செய்யும் யோகமும் கூட்டு யோகமும் ஒன்றல்ல; கூட்டு யோகத்தில் ஒரு கூட்டு ஆன்மா உள்ளது
முதல் தேவையான தவ ஒழுக்கம் ஆத்ம சமயமும், சுய கட்டுப்பாடும், அதன் முதல் அம்சம் யோகத்தின் விதிக்குக் கட்டுப்படுதலாகும்.
|