கேள்வி : ஒருவன் உண்மையாக ஆன்மீக பாதையில் நடக்கிறான் என்று எப்பொழுது சொல்லலாம்?
அன்னையின் பதில் :
முதல் அடையாளம் (இது எல்லோருக்கும் ஒன்றுபோலிராது. ஆனால் கால வரிசைப்படி சொல்வதென்றால், மற்ற எல்லாம்) சற்றும் முக்கியமில்லாதவைகளாகத் தோன்றும். சந்தர்ப்ப சூழ்நிலைகள் அப்படி அமைந்தால் உன்னுடைய இயக்கங்களெல்லாம் முன்போலவே தொடர்ந்து நடந்துகொண்டிருக்கும், ஆனால் அவை கொஞ்சமேனும் முக்கியத்துவம் இல்லாதவைகளாகத் தோன்றும், உனது வாழ்க்கையின் பொருள் அது அல்ல என்று உணர்வாய். அதுவே முதல் அடையாளம் என்று நினைக்கிறேன்.
இன்னொரு அடையாளம் இருக்கலாம். உதாரணமாக, எல்லாம் இப்பொழுது மாறி இருப்பதாக, நீ வேறு விதமாக வாழ்வதாக உணரலாம், மனத்தில் முன்பில்லாத ஓர் ஒளி இருப்பதை, இதயத்தில் முன்பு இல்லாத ஓர் அமைதி இருப்பதை உணரலாம். இதனால் ஒரு மாற்றம் ஏற்படத்தான் செய்யும். ஆனால் ஐயத்திற்கிடமற்ற மாற்றம் பொதுவாகப் பின்னரே வரும், தொடக்கத்திலேயே வருவது அரிது, ஆன்மீக வாழ்வு வாழவேண்டும் என்று உறுதி செய்யும் அந்த மனமாற்றம் ஏற்படும்போது மின்வெட்டுப் போல் வரலாம்.
சில சமயங்களில், மனத்தில் ஒரு பெரிய தெளிவு வடிவில் தொடக்கம் இருக்கலாம், ஓர் ஆழ்ந்த மகிழ்ச்சி உன்னுள் உண்டாகும். ஆனால் பொதுவாக, பிறகு இது பின்னணிக்குப் போய்விடும், ஏனெனில் இன்னும் உன்னிடத்தில் ஏராளமான குறைகள் போகாமல் இருக்கின்றன... அது அருவறுப்பு அன்று, ஆனால் எதிலும் உனக்கு ஈடுபாடு இருக்காது, எதையும் கவனிக்கவே தோன்றாது. உதாரணமாக, மனத்திற்கு உகந்த அல்லது அதற்கு எதிரான (இரு கோடிகளும் சந்திக்கும்) பெளதிகச் சூழ்நிலைகளில் இருக்கும்போது நீ இவ்வாறு சொல்லிக் கொள்வாய், "இதுவா எனக்கு அவ்வளவு முக்கியமாகத் தோன்றியது? இப்பொழுது இது சிறிதும் முக்கியமானதாகத் தோன்றவில்லையே!" நீ உண்மையாகவே மறுபக்கத்திற்குப் போய்விட்டதாக உணர்வாய்.
ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு தியானிக்க முடிவதுதான் ஆன்மீக வாழ்விற்கு அடையாளம் எனச் சிலர் கருதுகின்றனர்! இது மிகப் பரவலான கருத்து, நான் கடுமையாக விமர்சிக்க விரும்பவில்லை, ஆனால் தங்களால் நன்கு தியானிக்க முடியும் என்பதைப் பற்றிப் பெருமைப்பட்டுக் கொள்ளும் பலர் - ஒரு மணி நேரம் உட்கார்ந்திருந்தால் அதில் ஒரு நிமிடமாவது உண்மையாகத் தியானிப்பார்கள் என்று எனக்குத் தோன்றவில்லை. உண்மையாக தியானிப்பவர்கள் அதைப்பற்றிப் பேசமாட்டார்கள்; அவர்களுக்கு அது இயற்கையான ஒன்று. அது பெருமைப்பட்டுக்கொள்வதற்கான ஒரு விஷயமாக அல்லாமல், இயற்கையான ஒன்றாக ஆகிவிட்டபோது, நீ முன்னேறத் தொடங்குவதாகக் கருதலாம். அதைப்பற்றிப் பேசவும், அதனால் தங்களை மற்ற மனிதர்களை விட உயர்ந்தர்களாகக் கருதவும் செய்கிறவர்கள் பெரும் பகுதி நேரம் முழு மந்த நிலையில், முழுச்சடமாக இருக்கிறார்கள் என்பதை நீ உறுதியாகத் தெரிந்துகொள்ளலாம்.
தியானஞ் செய்வது மிகவும் கடினம். தியானத்தில் எத்தனையோ வகைகள்... நீ ஒரு கருத்தை எடுத்துக்கொண்டு ஒரு குறித்த பலனை அடைய அதைப் பின்பற்றிச் செல்லலாம் - இது செயல் திறமுடைய தியானம். ஏதாவது ஒரு பிரச்சனைக்குத் தீர்வு காண விரும்புபவர்கள் அல்லது எழுத விரும்புகிறவர்கள் தாங்கள் தியானம் செய்வதை அறியாமலே இந்த முறையில் தியானம் செய்வார்கள். வேறு சிலர் உட்கார்ந்து ஒரு கருத்தைப் பின்பற்றிச் செல்லாமல் ஏதாவது ஒரு முனையில் ஒருமுனைப்பட முயல்வார்கள் - தங்களுடைய ஒருமுனைப்புச் சக்தியை தீவிரமாக்க ஏதாவது ஒரு முனையில் ஒருமுனைப்படுவார்கள்.
|