உய்யவந்தார் என்ற ஜகத்ரக்ஷகன் இவ்வுலகம் காக்க திருக்கூடலூரில் கோயில் கொண்டுள்ளார்.
அமைந்துள்ள இடம்:- தஞ்சையிலிருந்து திருவையாறு சென்று அங்கிருந்து கும்பகோணம் செல்லும் பேருந்து வழியில் 11 கி.மீ. தொலைவில் திருக்கூடலூர் அமைந்துள்ளது. தேவர்களும், நந்தக முனிவரும் ஒன்று கூடி பெருமானைத் தரிசிக்க வந்ததால் கூடலூர் என்ற பெயர் வந்தது. ஐயம்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து வடக்கே 6 கி.மீ. வண்டியில் செல்லலாம். தங்கும் விடுதிகள் இல்லாததால் தஞ்சை அல்லது திருவையாற்றில் தங்கி வரலாம்.
மூலவர்:- வையங்காத்த பெருமாள் என்ற ஜகத்ரட்சகன் கிழக்கு முகம் நோக்கிய நின்ற திருக்கோலம்.
உத்ஸவர்:- வையங்காத்த பெருமாள் கையில் செங்கோல் ஏந்தி நிற்கிறார். தாயார்:- புஷ்பவல்லி என்ற பத்மாஸனி.
தீர்த்தம்:- சக்ர தீர்த்தம், காவிரி நதி.
விமானம்:- சுத்தஸத்வ விமானம்.
சிறப்பம்சம்:- காவிரி நதி, தான் இழந்த ஒளியை இத்தலத்திற்கு வந்ததால் மீண்டும் பெற்றதாக ஐதீகம். ஒருமுறை காவிரி நதியில் வெள்ளம் வந்து கோயில் வெள்ளத்தில் மூழ்கி மண் மேடாகி விட்டது. ராணி மங்கம்மாள் கோயிலைப் புதுப்பித்தாக வரலாறு. வெள்ளத்தில் மூழ்கிய மூலவர் விக்ரகங்கள் அருகில் உள்ள கீழ் வளத்தூர் என்ற ஊரைச் சேர்ந்த தீக்ஷிதர் ஒருவரின் கனவில் பார்த்த இடத்தில் தோண்டி எடுக்கப்பட்டதாகவும், பின்னர் அவ்வூரிலேயே 1741ல் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும் தெரிய வருகிறது.
மங்களாசாஸனம்:- திருமங்கையாழ்வார் தமது 10 பாசுரங்களால் மங்களாசாஸனம் செய்வித்துள்ளார்.
காவிரி பெருநீர் வண்ணன், கண்ணன் மேவித் திகழும் கூடலூர் மேல், கோவைத் தமிழால் கலியன் சொன்ன, பாவைப் பாடப் பாவம் போமே (1367வது பாசுரம் - பெரிய திருமொழி - 5)
|