முதன்மை பக்கம்  ஆன்மிகம்  ஆன்மிகம்  தலங்கள்
 
பிறவிப் பிணி அகல `சிருங்கேரி ஸ்ரீ சாரதாம்பாளை' தரிசிப்போம்
Webdunia

பெறற்கரிய பிறவியாம் மானிடப் பிறவியெடுத்து உயர்ந்த நிலையையும் அடைந்தவன் கூட ஸாஸ்வதமான பரமானந்த நிலையைப் பெற வேண்டுமானால் அவனுக்கு ஒரு நல்ல குரு தேவை. ஸத்குருவின் பெருமைகளைக் கூறியதோடு நில்லாமல் தானும் குருபக்தியையும், குருசேவைகயையும் சிரமேற் கொண்டொழுகினார் ஆதிசங்கரர்.

அத்தகைய பெருந்தகையால் நிறுவப்பட்டதும், குரு சிஷ்ய பரம்பரையில் இன்றும் குரு காட்டிய வழியில் நமது ஸனாதனமாகிய ஹிந்து வைதீக ஸம்பிரதாயங்களைக் கைக்கொண்டு செயல்படுவதும் சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம் ஆகும். இந்தப் பீடம் பல கிளைகளைக் கொண்டு ஹிந்து மதத்தின் பெருமைகளைக் காப்பாற்றி வருகிறது. அவ்வாறாகிய கிளைகளில் ஒன்று சென்னை, மேற்கு மாம்பலம் கிருபாசங்கரித் தெருவில் உள்ளது.

சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடாதிபதி சங்கராச்சார்யார் ஸ்ரீஸ்ரீ மஹாசன்னிதானம், ஸ்ரீ சன்னிதானம் ஆகியோரின் பரம அனுக்கிரகத்தால் 1977-ம் ஆண்டு நவம்பர் 14, 15 அன்று பூஜை செய்யப்பட்டு, 1978-ம் ஆண்டு ஸ்ரீ பீடத்தின் கிளையை நிறுவதற்காக வாங்கப்பட்டது. 1979-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. 1982-ம் ஆண்டு ஜனவரி மாதம் 31-ம் தேதி (தை மாதம் அசுவதி நட்சத்திரம்) அன்று வைதீக முறைப்படி மகாகும்பாபிஷேகம் நடந்தேறியது. 1995-ம் ஆண்டு மே மாதம் இரண்டாவது கும்பாபிஷேகம் நடந்தேறியது.

ஸ்ரீ சிருங்கேரி சாரதா மடத்தினுள் ஸ்ரீ ரத்னகர்ப்ப கணபதி, ஸ்ரீ சாரதாம்பாள், ஸ்ரீ நவநீத கிருஷ்ணர் ஆகிய மூன்று சன்னதிகளும் ஒருங்கே அமையப் பெற்றுள்ளன. சன்னதியிலுள்ள மூலவர் மற்றும் உள்ள எல்லா தெய்வங்களுக்கும் தினப்படி மற்றும் விசேஷ தின பூஜைகள் ஆதி நியமத்துடனும் ஆதி விமரிசையுடனும் நடத்தப்படுகிறது.

இங்குள்ள சாரதா தேவியானவள் `ப்ரம்ம வித்யா' ஸ்வரூபமாக அதாவது பிரம்ம விஷ்ணு சிவன் மற்றும் ஸக்தி ஸ்வரூபங்களாகிய சரஸ்வதி, லஷ்மி, பார்வதி அனைவரையும் உள்ளடக்கிய ஒரே ஸ்வரூபமாக ஸ்ரீ சக்கரத்தின் மேல் பமாசனத்தில் அமர்ந்து வேண்டுவோருக்கு வேண்டுவன எல்லாம் தருகிறாள்.

சர்வ வல்லமைகளையும் கொண்டவளாக, கருணையின் திருவுருவமாக அருள் பாலிக்கிறாள் அம்பிகை. இங்கு வீற்றிருக்கும் சாரதா அம்பாளுக்கு நான்கு கரங்கள். ஒன்று சின்முத்திரையுடன் விளங்குகிறது. இது ஜீவன் மற்றும் பிரம்மத்தின் ஐக்கியத்தைக் குறிப்பதாகும். இன்னொன்று ஜபமாலையுடன் விளங்குகிறது. அந்தக் கையின் மேல் கொஞ்சும் கிளி ஒன்றும் உள்ளது. இது ஜீவ உற்பத்திக்கு மூலாதாரமான புஜத்தைக் குறிப்பிடுகிறது. மற்றொரு கையில் அமிர்தகலசம் உள்ளது. இது என்றும் அழிவில்லாத் தன்மையை உணர்த்துகிறது. நான்காவது கையில் ஒரு புத்தகம் உள்ளது. இது ஸர்வ வித்யா ஸ்வரூபத்தை விளக்குகிறது.

இங்குள்ள ஒவ்வொரு தெய்வமும் மிகவும் சக்தி வாய்ந்ததாகத் திகழ்கிறது. இங்கு வந்து செல்வோர் அவர்களின் அனுபவங்கள் யாவும் அந்தத் தெய்வங்களின் திருவிளையாடல்கள் தான் என்று கூறி மெய்சிலிர்க்கின்றனர்; நம்மையும் மெய்சிலிர்க்க வைக்கின்றனர்.

ஸ்ரீ பீடத்தின் விசேஷ தினங்கள் யாவும் இங்கும் வெகுசிறப்புடன் கொண்டாடப்படுகின்றன. இவற்றில் மஹாலய அமாவாசையன்று தொடங்கி, விஜயதசமி வரை நடைபெறும் நவராத்திரி பூஜைகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. இந்த நாட்களில் ஹோமங்களும், அம்பாளின் அலங்காரங்களும், பிரபல வித்வான்களின் சங்கீத கச்சேரிகளும் குறிப்பிடத்தக்கவை. அம்பாளை ப்ரம்மியாக, மஹேஸ்வரியாக, கௌமாரியாக, இந்திராணியாக, வராகியாக, வைஷ்ணவியாக, சிம்மவாஹினியாக மஹிஷாசுரமர்த்தனியாக அலங்கரித்து அதற்குண்டான வாகனத்தில் ஏற்றிவைத்து கொலுவிருக்கச் செய்வதைக் காண ஓராயிரம் கண்கள் வேண்டும்.

நவராத்திரியின் 9 நாட்களும் வெவ்வேறு ஹோமங்கள் நடைபெறும். விஜயதசமியன்று ஸ்ரீசண்டி ஹோமம் நடைபெறும். மறுநாள் அம்பாள் கணபதி மற்றும் நவநீத கிருஷ்ணர் அலங்காரத்துடன் ஒய்யாரமாக திருவீதி உலா வரப்பெறும்.

மார்கழி மாதம் முழுவதும் காலை 5.30 மணிக்கு மூலவர்களுக்கு சிறப்பு வழிபாடும் மாலை 6.00 மணி முதல் விஷ்ணு சஹஸ்ரநாமம், இந்திராஷி, மிருத்யுஞ்சய ஜபங்கள் விபூதியில் வைத்து செய்யப்படும்.

பிரபல வித்வான்களும் கச்சேரியை கைங்கர்யமாகவே செய்கிறார்கள். பக்தர்களும் தங்களால் இயன்ற கைங்கர்யங்களைச் செய்து கொடுக்கிறார்கள். இங்கு தினமும் காலையில் 6 மணி முதல் 7 மணி வரை வேதம் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. மாலையில் தினமும் 4 முதல் 5 மணி வரை பெண்களுக்காக அஷ்டபதி மற்றும் ஸ்லோக வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த வகுப்புகளுக்கு வயது வரம்பில்லை; ஆர்வம் மட்டும் இருந்தால் போதும்.

அனைத்துப் பணிகளும் சிறப்புடன் நடக்க அங்கே ஓர் அச்சாணி, அன்பின் மறுஉருவாக, நம்மையெல்லாம் நன்னெறிப் படுத்தும் ஆசானாக அனுதினமும் சுழன்றுக் கொண்டிருக்கிறார் இராமகிருஷ்ணர் என்பவர். அவரைப் பார்த்ததும் ஒரு நல்ல ஆசான் கிடைத்துவிட்டதைப் போன்ற திருப்தியை ஏற்படுகிறது. நல்ல குருநாதரின் திருவடிகளை அண்டியவர் எவர்க்கும், சிறந்த தத்துவஞானம் ஏற்படுகிறது.

குரு நாதரின் பாத கமலங்களை வாக்காலும் மனத்தாலும் சரீரத்தாலும் வணங்க வேண்டுமென்ற ஆதிசங்கரரின் வாக்கிற்கிணங்கி, அவரது வழித் தோன்றலாகிய ஜகத்குரு ஸ்ரீ சிருங்கேரி சங்கராச்சார்யார் ஸ்ரீ மஹாஸ்வாமிகளிடம் பக்தி கொண்டு பயனடையலாம். மேலும் சர்வ வல்லமை கொண்ட சிருங்கேரி ஸ்ரீ சாரதாம்பாளின் பரிபூர்ண க்ருபாகடாஷத்தையும் ஒரு சேரப் பெற்று பிறவிப்பணி அகன்று இன்புற்று வாழ்வோமாக!

ஸ்ரீ சத்குரு சரணாவிந்தாப்யாம் நம :

(நன்றி : மாம்பலம் பேசுகிறது)
மேலும்
தொண்டை மன்னனுக்குக் காட்சி கொடுத்த திருமுல்லைவாயில் மாசிலாமணீசுவரர்!
அருள்மிகு முல்லைவனநாத சுவாமி திருக்கோயில் - திருக்கருகாவூர்
திருக்கரம்பனூர் - உத்தமர் கோயில்
திருக் கோழி (உறையூர், நிகளாபுரி)
திருவரங்கம் என்கின்ற ஸ்ரீரங்கம்
ஆறாவதுபடை வீடு : பழமுதிர்ச்சோலை