முல்லைவனநாதசுவாமி தென்னாட்டில் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது "திருக்கருகாவூர்" என்னும் திருக்களாவூர். இத்தலத்து இறைவன் முல்லைவனத்தில் எழுந்தருளியுள்ளதால் மாதவீ வனேஸ்வரர் என்றும், முல்லைவனநாதர் என்றும், மகப்பேறு அளிப்பதால் கர்ப்பபுரீஸ்வரர் என்றும் அழைப்பர்.
தாயின் வயிற்றிலுள்ள கருவைச் சிதையாமல் காக்கும் கருக்காத்த நாயகி - கர்ப்பரட்சாம்பிகை - திருவருள் திறம்மிக்கதாய் இங்கே கோயில் கொண்டிருக்கிறாள். எல்லா நலன்களும் நிறைந்து விளங்கும் திருத்தலம் திருக்கருகாவூர்.
பல ஆண்டுகளாக குழந்தைப்பேறு இல்லாதவர்கள் குழந்தை பாக்கியம் பெறவும், திருமணம் கூடிவராத பெண்களுக்கு விரைவில் திருமணம் கூடிவரவும் அன்னை கருகாத்த நாயகியை வேண்டினால் கோரிக்கையினை ஏற்று நிச்சயம் நிறைவேற்றுவாள்.
உண்மை உணர்ந்து, நம்பிக்கையோடு ஆயிரக்கணக்கானோர் ஆண்டு முழுவதும் வந்து தரிசித்துப் பயன்பெறும் திருத்தலம் திருக்கருகாவூர்.
தல இருப்பிடம் :
இத்தலம் நம் நாட்டின் சிறப்பில் முதலிடம் பெற்று விளங்கும் 275 தேவாரத் தலங்களுள் ஒன்றாகும். சோழ நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசத்திற்குத் தெற்கே 5 கி.மீ. தூரத்திலும், கும்பகோணம் தென்மேற்கில் 20 கிலோ மீட்டரிலும், சாலியமங்கலத்திற்கு வடக்கில் 10 கிலோ மீட்டரிலும், தஞ்சாவூருக்கு வடகிழக்கில் 20 கிலோ மீட்டரிலும், வெட்டாற்றின் தென்கரையில் இக்கோயில் அமைந்துள்ளது. இந்நான்கு திசைகளில் இருந்தும் வந்து போகப் பேருந்து வசதிகள் நிறைய உள்ளன.
தல வரலாறு :
அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கையும் இப்பூவுலக மக்கள் பெற்று உய்யும் வண்ணம் பரம கருணாமூர்த்தியாகிய சிவபெருமான் திருவருளே திருமேனியாகக் கொண்டு எழுந்தருளியிருக்கும் தலங்கள் பலப் பலவாகும். அவற்றுள் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய சிறப்புகளுடன் மூவர் தேவாரத்தையும் பெற்று மக்கள் பலரும் நாளும் வந்து தம் காரியசித்தியை அடையும் தலமாக விளங்கும் இத்திருக்கருகாவூர் மிகச் சிறப்புடையதாகும்.
|