வெள்ளையர் ஆட்சியை எதிர்த்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு, காலணி ஆதிக்கத்திற்கு எதிராக இந்திய மக்களை எழுற்சியுறச் செய்த அரவிந்த கோஸ், இறைவனின் வழிகாட்டுதலின் படி ஆன்மீக பாதையை தழுவி மாபெரும் சாதனை புரிந்து ஸ்ரீஅரவிந்தராய், உலகின் ஆன்மீக ஒளிவிளக்காய் திகழ்பவர்.
1872 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15ஆம் நாள் கொல்கட்டாவில் பிறந்தார் அரவிந்தர். டார்ஜிலிங்கில் பள்ளிப் படிப்பும், பிறகு மான்செஸ்டர், கேம்பிரிஜ்ட் பல்கலைகளில் பயின்று தேர்வு பெற்று, இந்திய அரசுப் பணிக்கு தேர்வு எழுதியவர். ஆனால் அதில் தேர்ச்சி பெறுவதை தவிர்த்து விட்டு இந்தியா திரும்பி, சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டார்.
குஜராத் மாநிலம் வதோதராவில் தங்கியிருந்து சுதந்திரப் போராட்டத்தில் நாட்டு மக்களை தட்டி எழுப்ப தன் பேனா முனையைக் கொண்டு தனது ஈடிணையற்ற எழுத்தாற்றலால் சுதந்திரத் தீயை மூட்டினார். பின் கொல்கட்டா திரும்பி வந்தே மாதரம் எனும் நாளிதழைத் துவக்கி வெள்ளையருக்கு எதிராக மக்களை வலிமையாகக் கிளர்ந்தெழச் செய்தார்.
சுதந்திரம் எனது பிறப்புரிமை என்று முழக்கமிட்ட பாலகங்காதர் திலகருடன் இணைந்து விடுதலைப் போரை தீவிரப்படுத்திய அரவிந்தரை, அலிப்பூர் சதி வழக்கில் தொடர்புப்படுத்தி வெள்ளையர் அரசு கைது செய்து சிறையில் அடைத்தது.
சிறை வாழ்க்கையில் அரவிந்தர் செல்ல வேண்டிய ஆன்மீக பாதைக்கு இறைவன் வழிகாட்ட, விடுதலை பெற்ற அரவிந்தர், மீண்டும் தன்னை வெள்ளையர் அரசு கைது செய்ய திட்டமிட்டதை முன்கூட்டி அறிந்து பாண்டிச்சேரிக்கு தப்பி வந்து தனது ஆன்மீகப் பணியைத் துவக்கினார்.
இப்புவியிடையே தெய்வீக ஆட்சியை ஏற்படுத்துவதே ஒட்முமொத்த மானுடத்தையும் உய்விக்கக்கூடிய ஒரே வழி என்று கூறிய அரவிந்தர், அதற்கான யோக மாமுயற்சியில் ஈடுபட்டார்.
1924ல் சித்தி பெற்ற ஸ்ரீ அரவிந்தர், அதிமன யோகம் எனும் கடினமான யோகத்தை அடுத்த 26 ஆண்டுகள் தொடர்ந்து மேற்கொண்டார். அப்போது ஆன்மீகம், யோகம், யோக முயற்சிகள், இந்தியாவில் ஆன்மீகம், பல்வேறு ஆன்மீக பாதைகள், மதம் ஆகியன குறித்து சாதகர்கள் எழுதிய பல நூறு கடிதங்களுக்கு பதிலெழுதி அதன் மூலம் உலகத்தவர் அனைவருக்கும் ஆன்மீக பயிற்சியை மேற்கொள்ளும் தெளிந்த வழிக்காட்டினார் ஸ்ரீ அரவிந்தர்.
தனது யோக முயற்சிகளுக்கிடையே தனது யோகத்தின் பாதையையும் நோக்கத்தையும் விளக்கிடும் சாவித்திரி எனும் மகா காவியத்தை ஸ்ரீ அரவிந்தர் படைத்தார். 1950 ஆம் ண்டு டிசம்பர் 5ஆம் தேதி தனது உடலை நீத்த ஸ்ரீஅரவிந்தர், இந்த மானுட வாழ்வு தெய்வீக வாழ்வாக மலர வைக்கும் பணி தொடர்ந்து நடைபெறம் என்றும், அப்பணிக்கு தனது உணர்வு என்றென்றும் உறுதுணையாக இருக்கும் என்று அவரோடு இணைந்து ஆன்மீகப் பணியை மேற்கொண்ட ஸ்ரீஅன்னையின் வழியாக உலகத்தவர்க்கு உறுதியளித்தார்.
|