சத்தி ஸ்ரீ பவானீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
ஈரோடு செய்தியாளர் வேலுச்சாமி
ஈரோடு, புதன், 9 செப்டம்பர் 2009( 13:15 IST )
webdunia photo
WD
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பவானி ஆற்றின் வடக்கு கரையில் உள்ளது ஸ்ரீ பவானீஸ்வரர் கோயில். இந்த கோயிலின் கும்பாபிஷேக விழாவின் தொடக்கமாக கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், ஸ்ரீ லட்சுமி பூஜை ஆகியவற்றுடன் தொடங்கியது.
இதையடுத்து கங்கைநீர் அழைத்து வருதல், பூமி பூஜை, பாலிகை பூஜை, வாஸ்து பூஜை மற்றும் முதலாம் கால வேள்வி பூஜை தொடங்கியது. இதையடுத்து தீபாராதனை நடந்தது. பின்னர் திருமறை பாராயணம் மற்றும் இரண்டாம் கால யாக பூஜை மற்றும் மூன்றாம் கால பூஜையும் நடந்தது.
நேற்று காலை ஐந்து மணிக்கு மங்கள இசையுடன் திருமுறை பாராயணமும் ஆறு மணிக்கு நான்காம் கால யாக பூஜையும் நடந்தது. பின்னர் கலை, தத்துவம், புவனம், வர்ணம், பதம், மந்திரம் ஆகிய மூல மந்திர ஹோமங்களும் நடந்தது.
அதன்பின் தீபாராதனை நடந்து காலை ஒன்பது முப்பது மணிக்கு ஸ்ரீ பவானீஸ்வரர் மற்றும் ஸ்ரீ பவானிசங்கரி ஆகிய கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.
webdunia photo
WD
அப்போது பக்தர்கள் சிவ, சிவ என கோஷமிட்டனர். பக்தர்களுக்கு கலச தீர்த்தம் மோட்டார் மூலம் பீய்ச்சியடிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னர் அலங்கார பூஜை நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மணிகூண்டு அருகே உள்ள வேணுகோபால் சுவாமி கோயிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கோவை மாவட்டம் காரமடை சிவஸ்ரீ ஞான சுவாமிநாத பண்டித குரு சுவாமிகள் மற்றும் சத்தியமங்கலம் சிவஸ்ரீ சிவமூர்த்தி குருக்கள், செந்தில்நாத குருக்கள் கும்பாபிஷேகத்தை நடத்தினர்.
கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை திருப்பணிக்குழு தலைவர் பொன்னுசாமி, செயலாளர் ஆடிட்டர் மயில்சாமி, பொருளாளர் சின்னராஜ், துனைதலைவர் காமதேனு கல்லூரி தாளாளர் பெருமாள்சாமி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
கும்பாபிஷேக விழாவில் சத்தியமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் தர்மலிங்கம், நகரமன்ற தலைவர் வேலுசாமி, துணை தலைவி ஜானகி மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.