பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும் ஆற்றுக்கால் பகவதி கோயில் பொங்கல் விழா இன்று காப்பு கட்டுதலுடன் துவங்குகிறது.
கால் சிலம்பு திருட்டுப்போன பிரச்சனையால், மதுரையை எரித்த கண்ணகி திருவனந்தபுரம் ஆற்றுக்கால் கிள்ளி ஆற்றங்கரையில் தெய்வமாக அவதரித்து கொடுங்கலூரில் ஐக்கியமானாள்.
ஆற்றுக்காலில் உள்ள கண்ணகி கோயில் முழுவதும், சிலப்பதிகாரக் கதை நிகழ்வுகள் சிற்பங்களாக செதுக்கப்பட்டு பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்துகிறது. இங்கு உள்ள கண்ணகி சிலையை பக்தர்கள் ஆற்றுக்கால் பகவதியாக அழைத்து நேர்ச்சைகள் செலுத்தி வழிபாடு நடத்துகின்றனர்.
இக் கோயிலில் மாசி மகத்தில் நடைபெறும் பொங்கல் விழா உலகப் புகழ் பெற்றது. ஒரே நாளில் 15 லட்சம் பெண்கள் கூடி தேவிக்குப் பொங்கலிட்டு, நேர்ச்சை செலுத்துவர். இந்த ஆண்டு இந்த விழா இன்று (வியாழக்கிழமை) காலை காப்புக் கட்டுதலுடன் துவங்குகிறது. பிப்ரவரி 22-ம் தேதி பொங்கல் விழா நடைபெறும்.
பிப்ரவரி 23-ம் தேதி திருவிழா நீராட்டலுடன் நிறைவடையும். அன்று இரவு பகவதிக்கு குருதி பூஜை நடைபெறும்.
|