திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசித் திருவிழா திங்கள்கிழமை காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இவ்விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இம்மாதம் 20-ம் தேதி நடக்கிறது.
முருகனின் அறுபடை வீடுகளுள் இரண்டாம் படை வீடாகவும், சூரசம்ஹாரம் நிகழ்ந்த தலமாகவும் திகழும் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் மாசித் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, திங்கள்கிழமை அதிகாலை ஒரு மணிக்கு திருக்கோயில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விசுவரூப தரிசனமும், பின்னர் உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றன.
பின்னர், அதிகாலை 4 மணிக்கு திருக்கோயிலில் இருந்து கொடிப்பட்டம் வெள்ளிப் பல்லக்கில் வைத்து ஒன்பது சந்திகள் வழியாக வீதி உலாவாகக் கொண்டுவரப்பட்டது. இதைத் தொடர்ந்து, காலை 5.15 மணிக்கு திருக்கோயிலிலுள்ள செப்பு கொடி மரத்தில் திரிசுதந்திரர்கள் வேதங்கள் ஓத, பஞ்ச வாத்தியங்கள் முழங்க, பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் சிவாச்சாரியார்களால் கொடிப்பட்டம் ஏற்றப்பட்டது. கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது.
மாலை 4.30 மணிக்கு தங்கச் சப்பரத்தில் எழுந்தருளிய அப்பர் சுவாமி, திருவீதிகளில் உழவாரப் பணி செய்து திருக்கோயில் வந்தடைந்தார். இரவு 7.30 மணிக்கு திருக்கோயிலில் இருந்து ஸ்ரீபெலி நாயகர் தந்தப் பல்லக்கில் அஸ்திர தேவருடன் எழுந்தருளி ஒன்பது சந்திகளிலும் உலா வந்து திருக்கோயில் வந்தடைந்தார்.
இம்மாதம் 15-ம் தேதி இரவு 7.30 மணிக்கு மேலக் கோயிலில் குடவருவாயில் தீபாராதனை நடைபெறும்.17-ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு மேல் 5 மணிக்குள் மகர லக்கனத்தில் திருக்கோயிலில் அருள்மிகு சண்முக பெருமானின் உருகு சட்ட சேவை நிகழ்ச்சி நடைபெறும்.
இம்மாதம் 18-ம் தேதி அதிகாலை 5 மணிக்கு சுவாமி பெரிய வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து மேலக் கோயில் சேர்கிறார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெறும். பின்னர், மதியம் 12 மணிக்கு மேல் சுவாமி ஆறுமுகநயினார் பச்சை கடைசல் சப்பரத்தில் பச்சைச் சாத்தி எழுந்தருளி வீதி உலா வந்து திருக்கோயில் சேர்கிறார். 20-ம் தேதி அதிகாலை 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் மகர லக்னத்தில் தேரோட்டம் நடைபெறும்.
|