திருக்குர்ஆன் அரபு மொழியில் அருளப்பட்டது. அரபுகள் தங்களின் மொழியையும், எழுத்தையும் அறிந்திருந்தார்கள். எனவே, உஸ்மான்(ரலி) அவர்கள் திருக்குர்ஆன் பிரதிகளை வெளியிட்டபோது, திருக்குர்ஆனின் எழுத்துகளுக்கு மேலும், கீழும் புள்ளி (நுக்தாக்)கள் வைக்கப்படவில்லை. அகர, இகர, உகர ஒலிகளை அறிவிப்பதற்கான (ஜேர், ஜபர், பேஷ்) என்று இன்று நாம் கூறும்) அடையாளங்களும் இல்லை. இவை இல்லாமலேயே அரபியர் நன்றாகப் படிப்பர். அதுவரை திருக்குர்ஆனை ஓதுவதில் எந்த பிரச்சினையும் எழவில்லை.
ஆனால், அரபுலகுக்கு வெளியில் இஸ்லாம் பரவி, அங்குள்ள முஸ்லிம்கள் திருக்குர்ஆனை ஓதத் தொடங்கியபோது அவர்களுக்கு மேற்குறிப்பிட்ட அடையாளங்களும், இலக்கணங்களும் தேவைப்பட்டன. இதற்கு முன்னர் நம் தமிழகத்தில் வாழ்ந்த கம்பர், ஒட்டக்கூத்தர், புகழேந்தி, வள்ளுவர் போன்ற பெரும் புலவர்கள் இருந்தார்கள். பெருங்காவியங்களும் இருந்தன. ஆயினும், இலக்கணம் இல்லை.
இந்நிலையில் இன்னல்லாஹ் பரீவும் மினல் முஷ்ரிகீன வரஸுலுஹு என்ற ஆயத்தை இன்னல்லாஹ பரீஉம் மினல் முஷ்ரிகீன வரஸுலிஹுஎன்று ஒருவர் தவறாக ஓதினார். அதாவது அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் இணைவைப் போரை விட்டு விலகி இருக்கிறார்கள் என்ற கருத்துள்ள வசனத்தை அல்லாஹ் இணைவைப் போரையும் தன்னுடைய ரசூலையும் விட்டு விலகி இருக்கிறான் என்று தவறான கருத்துப்பட ஓதியதை அபுல் அஸ்வத் அத் தெளலீ (ரஹ்) என்பவர் செவியுற்று, அல்லாஹுதலா தன் ரசூலை விட்டு விலகி இருப்பதை விட உயர்வானவன், கண்ணியம் நிறைந்தவன் எனக் கூறி விட்டு பாமரர்கள் இப்படியும் தவறாக ஓதுகிறார்களே என்று வருந்தியவர்களாக திருக்குர்ஆனை பிழையின்றி ஓதுவதற்காக அதில் அகர, இகர, உகர ஒலிகளுக்குரிய (ஜேர், ஜபர், பேஷ் போன்ற) அடையாளங்களை ஏற்படுத்தினார்கள்.
இவர் இராக்கிலுள்ள பஸராவைச் சேர்ந்தவர் ஸஹாபாக்களை சந்தித்த தாபியீன்களில் ஒருவர். இவர் தம் விருப்பப்படி திருக்குர்ஆனில் இவ்வாறான அடையாளங்களை இட முடியாது. எனவே இவ்வாறு தவறாக ஓதுவது பற்றிய தகவலை அப்போது கலீஃபாவாக இருந்த அலீ(ரலி) அவர்களுக்கு அறிவித்து, அவர்களின் அனுமதியுடன் அபுல் அஸ்வத்(ரஹ்) செய்ததாகவும் இலக்கணத்திற்குரிய அடிப்படைச் சட்ட விதிகளை அலீ(ரலி) அவர்களே அறிவித்ததாகவும், இதனால் அரபி இலக்கணத்தின் தந்தை அலீ(ரலி) அவர்கள் என்றும் கூறப்படுகிறது. திருக்குர்ஆனில் அகர, இகர, உகர ஒலிகளுக்குரிய அடையாளங்கள் அபுல் அஸ்வத் அவர்களால் இடப்பட்டது சிவப்பு மை புள்ளிகள் மட்டுமே.
|