முஸ்லிம்களின் காலண்டரில் வரும் 9வது மாதம்தான் ரமலான் மாதமாகும். திருக்குறானில் கூறியபடி, சொர்கத்தில் இருந்து வரும் தேவத் தூதன், மக்களுக்கு சொர்கத்தை அடைவதற்கான வழியைக் காண்பிக்கும் மாதமாகும் இந்த ரமலான் மாதம்.
இந்த மாதம் முழுக்க முஸ்லிம்கள் நோன்பு கடைபிடிக்கின்றனர். தங்களது பாவங்களை குறைத்து, இறை வழிபாட்டின் மூலம் சொர்கத்தை அடைய நோன்பு இருக்கின்றனர்.
இந்த மாதத்தில் முஸ்லிம்கள் தங்களது அன்றாட பணிகளைக் குறைத்துக் கொண்டு தொழுகைக்காக அதிக நேரம் செலவிடுகின்றனர். பகல் வேளையில் உண்ணுவதையோ, பானம் அருந்துவதையோ தவிர்க்கின்றனர். இந்த நோன்பு சமயத்தில் புகைப்பிடிப்பதைக் கூட நிறுத்திவிடுகின்றனர்.
அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பாக உணவு உண்டு அதன் பின் நோன்பை துவக்குகின்றனர். மாலை சூரிய அஸ்தமனத்திற்குப் பின் தங்களது நோன்பை சிறப்புத் தொழுகையுடன் முடித்துக் கொண்டு இஃப்தார் என்று அழைக்கப்படும் உணவை உண்கின்றனர்.
மீண்டும் மறுநாள் காலை சூரிய உதயத்தின்போது நோன்பு துவங்குகிறது. இதுபோல் ரமலான் மாதம் முழுவதும் நோன்பை கடைபிடிக்கின்றனர்.
பொய் சொல்லுதல், இழிவுபடுத்துதல், புறம்பேசுதல், பொய் சத்தியம் கூறுதல், பேராசை ஆகிய ஐந்தையும் நோன்பின்போது தவிர்க்க வேண்டியது அவசியமாகும்.
ரமலான் மாதம் முடிந்து ஷவ்வால் மாதத்தின் முதல் நாளன்று நோன்பு முடிந்ததாகக் கணக்கிடப்பட்டு அந்நாள் முஸ்லிம்களின் பண்டிகையான ரம்ஜானாகக் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி ரமலான் மாதம் துவங்கியது. அக்டோபர் 12ஆம் தேதியுடன் நோன்பு முடிந்து அக்டோபர் 13ஆம் தேதி ஷவ்வால் மாதம் துவங்குகிறது. அக்டோபர் 13 சனிக்கிழமை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
|