திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடவுளுக்கு அணிவிக்கப்படுவதற்காக பக்தர்கள் காணிக்கையாக அளித்த நகைகளின் மதிப்பு ரூ.32 ஆயிரம் கோடி இருக்கும் என்று தேவஸ்தான அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இருக்கும் மொத்த நகைகள் விவரங்கள் குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவிக்க வேண்டும் என்று கோரி ஐதராபாத்தை சேர்ந்த பக்தர் ஒருவர் ஐதராபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் திருமலை திருப்பதி தேவஸ்தானம் இன்னும் 3 வாரத்திற்குள் திருப்பதி தேவஸ்தானத்தில் இருக்கும் தங்க நகைகள் பற்றிய விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.
ஏழுமலையானை தரிசிக்க பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் கோயில் உண்டியலில் காணிக்கையாக பணம், வெள்ளி, தங்கம் ஆகியவற்றை செலுத்துகின்றனர்.
மேலும் ஒரு சிலர் தங்கத்தால் செய்யப்பட்ட, வைர கற்கள் பதிந்த ஆபரணங்களை ஏழுமலையானுக்கு காணிக்கையாக செலுத்துகின்றனர். இவ்வாறு பக்தர்கள் காணிக்கையாக திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செலுத்தியுள்ள தங்க, வைர நகைகள் மொத்த மதிப்பு ரூ.32 ஆயிரம் கோடி இருக்கும் என்று தேவஸ்தான அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.
திருப்பதி தேவஸ்தானம் சார்பில் இன்னும் 3 வாரத்திற்குள் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யும்போது ஏழுமலையான் கோயிலில் இருக்கும் மொத்த நகைகளின் உண்மையான முழு விவரம் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.