சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள ஈஸவரன் கோயிலான காசி விசுவநாதர் கோயிலின் கும்பாபிஷேகம் நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு இறைவனை தரிசித்தனர்.
சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள ஸ்ரீகாசி விசாலாட்சி உடனுறை ஸ்ரீகாசி விசுவநாதர் கோயில் உள்ளது. இது 400 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இங்குள்ள மூலவர் சுயம்புவாக அவதரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பக்தர்களால் பெரிதும் போற்றப்படும் இந்தக் கோயிலின், ஸ்ரீகாசி விசுவநாதர் சன்னதி உள்பட அனைத்து சன்னதிகளும், கோபுரங்களும் சீரமைக்கும் திருப்பணி 2003ஆம் ஆண்டில் தொடங்கி தற்போது முடிந்தது.
ஏறக்குறைய 4 கோடி ரூபாய் செலவில் திருப்பணிகள் முடிக்கப்பட்டுள்ள ஸ்ரீகாசி விசுவநாதர் கோயிலின் கும்பாபிஷேகம் நேற்று காலையில் நடைபெற்றது.
காலை 6 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, நாடி சந்தானம், தத்வார்ச்சனை உள்பட பூஜைகள் நடைபெற்றன. 9 மணிக்கு பிரதான யாக பூஜைகள் முடிக்கப்பட்டு 9.15 மணிக்கு யாக சாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித நீர் கலசங்கள் மேளதாளம் முழங்க ராஜகோபுரம் உள்ளிட்ட கோபுரங்களின் உச்சிப்பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டன. அதன்பின் அங்கு சிறப்பு பூஜைகளுடன் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவையொட்டி தொடர்ந்து 3 நாட்களுக்கு கோவிலில் வேதபாராயணமும், திருமுறைகள் ஓதுதல், சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை மாலை 7 மணிக்கு டாக்டர் சீர்காழி கோ.சிவசிதம்பரம் குழுவினரின் இன்னிசைக் கச்சேரி நடைபெறுகிறது.
|