ஆன்ம நேயமும் ஆன்ம லாபமும்!
சுப்பையா சுவாமிகள் கடைசியாகப் பேசியது திருக்கழுக் குன்ற மலையிலமர்ந்த ஓராண்டு வரைதான் (1951) அவர் என்ன உபதேசம் செய்திருக்க முடியும் என சிலர் எண்ணக் கூடும். சுவாமிகள் சிறு வயதிலிருந்தே பலருக்கு அவரவரின் பக்குவத்திற்கேற்ப பல நேயமான வார்த்தைகளைச் சொல்லியதுண்டு. இந்த மந்திரத்தால் நீ ''விநாயகரை'' வழிபடு, இந்த மந்திரத்தால் நீ ''நாராயணனை'' வழிபடு, நீ ''ராம'' என்று எழுது, நீ ராமராம் என எழுது, நீ ஸ்ரீராமஜெயம் எழுது என சொல்லியிருக்கிறார்.
இன்றும் சிலர் அதைச் செய்கிறார்கள். இது ஆன்ம நேயச் செயல் அந்த ஆன்மா கஷ்டப்படுகிறது. அலை கடல் துரும்புபோல் அல்லலுறுகிறது- நமமால் ஆன உதவி இதோ என்பது நேயம். இதனால் அந்த ஆன்மா லாபம் பெறலாம் அது ஓரளவே. ஆனால் ஆன்மாவுக்கு லாபம் என்பது ''புண்ணியம்'' மட்டுமே அதற்கு நஷ்ட மேற்படுத்துவது பாபம். இவற்றைச் சேர்ப்பது சொல், எண்ணம், உடல்.
சுவாமிகளின் கடைசி கடிதத்தில் ஒரு பகுதி...
உலகத்தில் பல அறிஞர்களும், வேதாந்திகளும், சித்தாந்திகளும் மரணத்தின் பின் உயிர் முத்தி நிலையை அடைகிறதென்று பறைசாற்றுகிறார்கள். உண்மையில் அவ்வாறு அல்ல என்பதே மெய்த் தொண்டர்கள் முடிவு. இந்தத் தூல தேகம் நாலாயிரத்து நானூற்று நாற்பத்தெட்டு வியாதிகட்குக் கட்டுப்பட்டிருக்கிறதால் இவ்வித வியாதிகளால் பீடிக்கப்பட்ட சீவன் முடிவில் தூலத்தை இழந்து பூ உலகில் செய்த புண்ணியம், பாவம், இதர கருமங்களுக்கு ஏற்றவாறு முறையே சொர்க்கலோகத்திலும், நரகலோகத்திலும், பூ உலகத்திலும் மீண்டும் பிறப்புற்று தூலத்தைப் பொருந்தி நிற்கும்.
இந்தத் தூல சரீரத்தை கற்ப மூலிகையாலும், தத்துவ கற்பங்களாலும் எண்ணிறந்த யுகம் வலுவாக்கிக் கொண்டு தவம் புரியும் ஆற்றல் உடையோர்களை சித்தர்கள் என்றும், முனிவர்கள் என்றும் யோகியர் என்றும் ஆன்றோர் கூறுவர். இவ்வித நீண்ட ஆயுளைப் பெற்ற நிலை முத்தியோ என்னின்? அன்று! ஏன்? கற்பத்தின் ஆயுள் எவ்வளவோ அவ்வளவு காலந்தான் உடல் நிலை பெறுமேயொழிய வரம்பின்றி கால அதீத நிலையை அடையாது. மேலும் தூல சரீரத்தின் குற்றம் ஓரளவு நீக்கப் பெறுமேயொழிய சூக்கும, காரண, சரீரங்களின் குற்றம் களையப் பெறாது சீவத்துவம் உற்று நிற்கும்.
பஞ்ச கர்த்தர்களாகிய பிரம்மா, விஷ்ணு, உருத்திரன், மகேசன், சதாசிவன் முதலியோர்கள் முத்தர்களோ எண்ணின்? அன்று! ஏன்? பிரம்மா முதல் சதாசிவன் முடிவாக ஐந்து மலங்கள் முதல் ஒரு மலம் வரை பாசப்பிடிப்பு உடையோர்கள் ஆதலால் அன்னார்களும் சீவர்களேயொழிய சீவன் முத்தர்கள் அல்லர். தத்துவங்கள் தொண்ணூற்றாறு சுத்திகரிக்கப்பட்ட நிலையில் பஞ்ச பூதங்களும் வேறு கொலைக் கருவிகளும் எந்த அசுரர்களும், தேவர்களும், சித்தர்களும், பஞ்ச மூர்த்திகளும் எந்தவித ஹானியும் செய்ய அசக்தியுடையதாய் விளங்கும்.
தேகம் சுத்தமான நிலை ஜீவன் முத்தன் நிலை. இந்நிலை உடையாருக்கு நரை, திரை, பிணி, மூப்பு, சாக்காடு ஆகிய குற்றம் கிடையாது. மேலும் அந்நிலை உடையார் ஈசன் நிலைபெற்று சர்வ சித்தியும் பெற்று பஞ்ச கர்த்தர்களும் அவருக்குச் சேவை புரியும் பெருமையுடையவராய் நிலவுவர். இவருடைய மகிமை அளவற்றது. இவர் திருஷ்டியே பிரேதத்தை உயிர் பெற்று நிலவச் செய்யும். இவர் எண்ணரிய நன்மைகளைச் செய்து முடிவில் உருவத்தை அருவமாக்கிப் பலபேர் அறிய மறைந்து விடுவர். இவர் தேகம் பிணமாகி விழாது. பிணங்களை எழுப்பும் வல்லமையுடையார் எவ்வாறு மரணம் உறுவர்? தேகம் பிணமாக விழுந்தால் மீண்டும் சீவன் பிறவியுறும். உடலைக் கரைக்கும் வித்தையே முடிவான பிரம்ம வித்தை. பிரம்ம வித்தையின் பயனே முத்தி.
|