ஒரிசா மாநிலம் பூரி ஜெகநாதர் ஆலய ரதயாத்திரை திங்கட்கிழமையன்று கோலாகலமாக தொடங்கியது.
ஆண்டு தோறும் கிருஷ்ணர் தன் பிறந்த ஊரான துவாரகாவுக்கு சென்று ஒரு வாரம் தங்கியிருந்து திரும்புவது வழக்கம். கிருஷ்ணருடன் அவரது சகோதரர் பலராமரும், சகோதரி சுபத்ரா தேவியும் உடன் செல்வர்.
இதை கொண்டாடும் வகையில் 3 சுவாமிகளையும் தேரில் யாத்திரையாக கொண்டு சென்று வழிபாடு நடத்துவர்.
இந்த வகையில் உலக புகழ்பெற்ற கோவிலான ஒரிசாவில் உள்ள பூரி ஜெகநாதர் கோவிலில் 9 நாள் ரத யாத்திரை திருவிழா நேற்று தொடங்கியது. பல்வேறு பூஜைகளுக்கு பிறகு 3 சுவாமிகளின் சிலைகளையும் தேருக்கு கொண்டு வந்தனர். ஜெகநாதர் கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட தேர் நேற்று காலை புறப்பட்டது.
மூன்று தேர்களும் சுமார் 3 கி.மீ. தூரம் வலம் வந்து பின்னர் குண்டிச்சர் கோவில் முன் நிலைக்கு வந்தது.
சுவாமிகள் அங்கு 9 நாட்கள் தங்கி இருந்துவிட்டு, வரும் 26-ந் தேதி மீண்டும் ஜெகநாதர் கோவிலுக்கு கொண்டு வரப்படும். இதனைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் பூரி நகரில் திரண்டிருந்தனர்.
இதேப்போன்ற ரத யாத்திரை பஞ்சாப், இம்பால் பகுதிகளிலும் கொண்டாடப்படுகிறது.
|