கார்த்திகை மாதம் பௌர்ணமியன்று சந்திரன் கிருத்திகை நட்சத்திரத்திலிருக்கும் போது கார்த்திகை விழா கொண்டாடப்படுகிறது. பஞ்சபூதங்களான நிலம், நீர், தீ, காற்று, வானம் இவைகளால் ஆனதே பிரபஞ்சம். அவற்றுள் நெருப்பை வழிபடுவதுதான் தீபத் திருவிழா.
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்படுவது இக்கார்த்திகை மாதத்தில்தான். இந்த ஆண்டு தீபத் திருநாள் நவம்பர் 24-ம் தேதி சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. தீபத் திருவிழா என்றதுமே நம் நினைவில் வந்து நிற்பது திருவண்ணாமலை திருத்தலம்தான்.
திருவண்ணாமலை கார்த்திகை தீபம் தமிழ்நாட்டில் நடைபெறும் மிகப் பெரிய உற்சவங்களில் ஒன்று. இவ்விழா பதினேழு நாட்களுக்கு பிரம்மோற்சவமாகக் கொண்டாடப்படுகிறது.
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்தின்போது முறையே முதல் மூன்று நாட்கள் எல்லைப் பிடாரி, துர்கை, விநாயகர் ஆகியவர்களுக்கான விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.
மேலும் இந்த மூன்று நாட்களில் ஐயனார், சப்தமாதர்கள் எல்லைத் தேவதைகள் ஆகியவர்களுக்கும் சிறப்பு வழிபாடு நடைபெறும்.
பின்னர் கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கும் இவ்விழா 10 நாட்களுக்குச் சிறப்பாக நடைபெறும். இந்த 10 நாட்களும் விதவிதமான அலங்காரங்களுடனும், மேளம், நாதஸ்வரம், துந்துபி போன்ற இன்னிசைக் கருவிகள் முழங்கவும் சைவத் திருமறைப் பாடல்கள் ஒலிக்கவும் வெவ்வேறு வாகனங்களில் அண்ணாமலையார் வலம் வருவார்.
திரு அண்ணாமலையார் எழுந்தருளும் வாகனங்கள் :
முதல் நாள் -------- அதிகார நந்தி இரண்டாம் நாள் ---- வெள்ளி இந்திர விமானம் மூன்றாம் நாள் ----- சிம்ம வாகனம் நான்காம் நாள் ----- கற்பக விருட்சம் ஐந்தாம் நாள் ------ வெள்ளி ரிஷப வாகனம் ஆறாம் நாள் ------ வெள்ளிரதம் ஏழாம் நாள் ------- மகாரதம் (மரத்தேர்) எட்டாம் நாள் ------ குதிரை வாகனம் ஒன்பதாம் நாள் ---- கைலாச வாகனம் பத்தாம் நாள் ------ தங்க ரிஷபம்
|