சப்பாணி, குருடன், குஷ்டரோகிகள் என ஏராளமான நோயாளிகளை இறையருளால் சுகமாக்கினார். கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்ட லாசர் என்பவரை உயிரோடு எழுப்பினார். வேதாகமத்தை வாசித்தால் அவர் செய்த அற்புதங்கள், அதிசயங்களை இன்னும் விரிவாய் அறிந்து கொள்ளலாம்.
இயேசு உடலில் 5,466 காயங்கள்!
மரித்தோரை உயிர்பித்து தான் தேவகுமாரன் என்பதை நிரூபித்த இயேசுவை அப்போதைய யூத மதத் தலைவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரு பாவமும் செய்யாத அவர் மீது குற்றம் சுமத்தி சிலுவையில் அறைந்து கொடூரமாக கொலை செய்தனர். அவர் சிலுவைப்பாடுகளை அனுபவித்த போது அவர் உடல் முழுவதும் கிட்டத்தட்ட 5,466 விழுப்புண்கள் இருந்ததாக கூறப்படுகிறது. சிலுவையில் மரித்த இயேசு 3ஆம் நாளில் உயிர்த்தெழுந்தார். மனிதனாகப் பிறந்து உயிரோடு எழும்பிய ஒரே நபர் அவர் மட்டுமே. இந்த நேரத்தில் சாமானிய மனிதர்கள் மனதில் ஒரு கேள்வி எழும்.
இறைவன் ஏன் 3 நாள்கள் கழித்து உயிரோடு எழும்ப வேண்டும். உயிர் நீத்த அதே நொடியில் மீண்டும் உயிர்த்தெழக் கூடாதா என்பதே அது. இந்தக் கேள்வி பலரின் விசுவாசத்தை அலைக்கழிக்கிறது.
ஆதியாகமத்தில் முதல் அத்தியாயத்தை படித்தால் 6 நாட்களில் தேவன் உலகத்தையும் அதன் சகல ஜீவராசிகளையும் படைத்தார் என்பதை அறிய முடியும். ஆனால் கோடிக்கணக்கான ஆண்டுகள் உருண்டோடிதான் உலகம் உண்டானதாக விஞ்ஞானிகள் உறுதிப்பட கூறுகின்றனர். இதனால் அறிவியலுக்கும் கிறிஸ்தவ மத நம்பிக்கைக்கும் இடையில் மிகப்பெரிய இடைவெளி இருப்பதாக தோன்றும். உண்மை அப்படியல்ல.
அன்பை ருசித்து பார்!
இறைவனின் கால நேர கணக்குப்படி பல கோடி ஆண்டுகள் அவருக்கு ஒரு நாள் போல் இருக்கலாம். அவருடைய கணக்குப்படி இயேசு கிறிஸ்து இறந்த அதே நொடியில் உயிர்தெழ செய்திருப்பார். ஆனால் நம்முடைய கால, நேர கணக்குப்படி 3 நாள்கள் போல் தோன்றுகிறது.
நாம் மனித மூளையின் சக்திக்கு தகுந்தாற்போல் சிந்திக்கிறோம். தேவனுடைய அறிவை அறிந்து கொள்ளும் அளவிற்கு நமக்கு ஞானம் போதாது. மனித குலத்திற்கு மீட்பிற்காக மரித்து உயிர்ந்தெழுந்த இயேசு இன்றும் உயிரோடு ஜீவிக்கிறார். தம்மை நோக்கி உண்மையோடு வேண்டுபவர்களுக்கு பாவ மன்னிப்பை அருளி, பரலோகத்தில் அவர்களுக்கும் ஓரிடத்தை உறுதி செய்து கொடுக்கிறார்.
அவருக்கு பிரியமாய் பரிசுத்தமாக வாழ வேண்டும் என்று மட்டுமே விரும்புகிறார். ஆனால் மனிதர்கள் உலகத்தின் இச்சைகளால் இழுப்புண்டு பாவசேற்றில் சிக்கி அமிழ்ந்து போகிறார்கள்.
ஒரே ஒரு முறை இயேசு கிறிஸ்துவின் புனிதமான அன்பை அனுபவித்தவர்கள் அவருடைய அருளின் வல்லமையையும், ஈடிணையற்ற கருணையையும் அறிந்து கொள்ள முடியும். இந்த ஈஸ்டர் திருநாளிலாவது மனிதர்கள் இறைவனை நோக்கி தங்கள் மனதைத் திருப்பி பரலோகப் பாதைக்கு திரும்ப வேண்டும் என்று இயேசு எதிர்பார்க்கிறார்.
|