ஆன்மீக வாழ்க்கை, சமய வாழ்க்கை, ஒழுக்கத்தை அதன் ஒரு பாகமாகக் கொண்ட சாதாரண வாழ்க்கை ஒவ்வொன்றும் வெவ்வேறானவை; நாம் எதை விரும்புகிறோம் என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும், மூன்றையும் ஒன்றாகக் குழப்பக் கூடாது. சாதாரண வாழ்க்கை சராசரி மனித உணர்வின் வாழ்க்கை, அது தன்னுடைய உண்மையான ஆன்மாவிலிருந்தும் இறைவனிடமிருந்தும் பிரிந்துள்ளது; மனம், பிராணன், உடல் ஆகியவற்றின் சாதாரண பழக்கங்களால் நடத்தப்படுகிறது. அவை அஞ்ஞானத்தின் விதிகளாகும்.
சமய வாழ்க்கை என்பது அதே அஞ்ஞான மனித உணர்வின் இயக்கம் பூமியைவிட்டு விலகி இறைவனை நோக்கித் திரும்புதல் அல்லது திரும்ப முயலுதல் ஆகும், ஆனால் இன்னும் ஞானமில்லாமல் புவி உணர்வின் கட்டுகளிலிருந்து விடுபட்டு ஆனந்தமான சுவர்க்கம் போன்ற ஒன்றுக்கு வழி கண்டுபிடித்துவிட்டதாகச் சொல்லிக் கொள்ளும் ஏதோவொரு சமயப் பிரிவின் அதிகார தோரணையிலான கோட்பாடுகளைப் பின்பற்றிப்போகும். சமய வாழ்க்கை ஆன்மீக வாழ்க்கைக்கு முதல்படியாக இருக்கக்கூடும், ஆனால் பெரும்பாலும் அது சடங்காசாரங்களிலும் கண்மூடிக் கருத்துக்களிலும் எவ்வித பலனுமின்றி உழன்றுகொண்டிருப்பதாகவே முடியும். மாறாக, ஆன்மீக வாழ்க்கை நேரடியாக ஓர் உணர்வு மாற்றத்திலிருந்தும், கடவுளிலிருந்தும் தனது சொந்த ஆத்மாவிலிருந்தும் பிரிந்துள்ள அஞ்ஞான சாதாரண உணர்விலிருந்து ஓர் உயர் உணர்வுக்கு மாறுவதிலிருந்து தோன்றுகிறது. அந்த உயர் உணர்வில் ஒருவன் தன்னுடைய உண்மையான ஆத்மாவைக் காண்கிறான், முதலில் இறைவனுடன் நேரடியான உயிருள்ள தொடர்புகொள்கிறான், பிறகு அவனுடன் ஐக்கியமடைகிறான். ஆன்மீக சாதகன் நாடுவது இது ஒன்றைத்தான். மற்ற எதுவும் அவனுக்கு முக்கியமல்ல.
*
ஒழுக்கம் சாதாரண வாழ்க்கையைச் சேர்ந்தது. அது மனத்தினால் வகுத்துக் கொள்ளப்பட்ட சில விதிகளின்படி நடத்தையைக் கட்டுப்படுத்தும் முயற்சி அல்லது மனத்தினால் வகுத்துக் கொண்ட ஒரு இலட்சியத்தின்படி தன்னுடைய குணத்தை அமைத்துக் கொள்ளும் முயற்சி. ஆன்மீக வாழ்க்கை மனத்திற்கு அப்பால் செல்கிறது. அது ஆத்மாவின் ஆழ்ந்து உணர்வினுட் சென்று ஆத்மாவின் உண்மையிலிருந்து செயல்படுகிறது. அற வாழ்க்கைப்பற்றியும், இறைவனை அடைவது பற்றியும் கேட்கப்படும் கேள்விக்குப் பதில், வாழ்க்கையின் நோக்கங்கள் நிறைவேறுதல் என்பதற்குக் கொடுக்கப்படும் பொருளைப் பொறுத்திருக்கும். ஆன்மீக உணர்வினைப் பெறுதல் அந்த நிறைவேற்றத்தின் ஒருபாகமாக இருந்தால் வெறும் நல்லொழுக்கத்தினால் மட்டும் அதைப் பெற்றுவிட முடியாது.
*
|