இனம், மொழி, நாடு, நிறம், சாதி, மதம் என்ற மனிதனை வேறுபடுத்தும் எந்த பேதமும் அற்ற, மானுடத்தின் ஒற்றுமையையும், மானுட வாழ்வின் உயர் நோக்கமான ஆன்மிக முழுமையை எட்டுவதையே நோக்காகக் கொண்டும் வாழ விரும்பி வரும் மனிதர்களுக்கு -வருங்காலத்திற்கான வழிகாட்டுதல் நகரமாய் - ஸ்ரீ அன்னை உருவாக்கியதே ஆரோவில் என்றழைக்கப்படும் உதய நகரமாகும்.
1968 ஆம் ஆண்டு தமிழக - புதுவை எல்லையில் செம்மண் பூமியாய் பொட்டல் காடாய் திகழ்ந்த பகுதியில், பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதியன்று, அங்குள்ள ஆலமரத்திற்கு அருகில் 5,000 பேர் திரண்டு, அங்கு வைக்கப்பட்ட பேழையில் 124 நாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட மண்ணை இட்டு ஆரோவில் நகரத்திற்கு வித்திட்டனர்.
மானுட வரலாற்றில் குறிப்பிடத்தக்க அந்த உன்னத நிகழ்வின் 40 வது ஆண்டு தினம் இன்று. இன்றைக்கு அந்த பூமியில் - ஸ்ரீ அன்னை கண்ட கனவு அற்புதமாய் வடிவம் பெற்று, அதன் நோக்கத்தை நோக்கி வளர்ந்து வருகிறது.
ஆரோவிலின் ஆன்மா என்று அன்னையால் அழைக்கப்பட்ட மாத்ரி மந்திர் நடு மையமாக திகழ, அதனைச் சுற்றி பல நூறு ஏக்கர் நில பரப்பில் புதியதோர் நகரம் உருவாகி வருகிறது.
ஆரோவிலில் இன்று 43 நாடுகளைச் சேர்ந்த, பல்வேறு இன, மொழி, நிறத்தைச் சேர்ந்த 1,940 பேர் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் இந்தியர்கள் 799 பேர்.
இந்திய அரசால் பரிந்துரைக்கப்பட்டு, ஐ.நா.வின் யுனஸ்கோ அமைப்பால், “மானுடத்தின் எதிர்காலத்திற்கான உன்னத திட்டம்” என்று அங்கீகரிக்கப்பட்ட ஆரோவில் நகர் யாருக்காக? எந்த நோக்கத்திற்காக நிர்மாணிக்கப்பட்டது? அதனை வழி நடத்திடும் கோட்பாடு என்ன என்பதை ஸ்ரீ அன்னை, ஆரோவில் துவக்கப்பட்ட நாள் அன்றே எழுதியளித்தார்.
ஆரோவில் சாசனம் :
ஆரோவில் குறிப்பிட்ட எவருக்கும் சொந்தமன்று. ஆரோவில் மானுட இனம் முழுவதிற்கும் சொந்தமானது. ஆனால் ஆரோவிலில் வசிக்க வேண்டுமானால் ஒருவன் இறை உணர்விற்கு விருப்பமுடன் தொண்டு செய்பவனாக இருக்க வேண்டும்.
ஆரோவில் முடிவில்லாத கல்வி, இடைவிடாத முன்னேற்றம், மாறாத இளமை இவற்றிற்குரிய இடமாகும்.
ஆரோவில் இறந்த காலத்திற்கும் வருங்காலத்திற்கும் ஒரு பாலமாக இருக்க விரும்புகிறது. மனிதனின் வெளி உலக, அக உலக்க் கண்டு பிடிப்புகள் அனைத்தையும் பயன்படுத்திக் கொண்டு ஆரோவில் துணிவுடன் எதிர்கால சித்திகளை நோக்கிப் பாய்ந்து செல்லும்.
ஆரோவில் மானுட ஒருமைப்பாட்டிற்கு ஓர் உயிருள்ள உருவம் கொடுப்பதற்கான பெளதில, ஆன்மிக ஆராய்ச்சிக்குறிய இடமாகத் திகழும்.
ஆரோவிலில் யார் இணையலாம்?
“நல்லெண்ணமுடையோர் அனைவருக்கும் ஆரோவிலின் வாழ்த்துகள்.
முன்னேற்றத் தாகமுடையோர், இன்றுள்ள வாழ்வை விட உயர்ந்த உண்மையான ஒரு வாழ்விற்காக ஆர்வங்கொள்வோர் அனைவரையும் ஆரோவிலிற்கு வருமாறு அழைக்கின்றோம்” என்று அன்னை கூறியுள்ளார்.
|