மத்திய இந்தியாவில் உள்ள ஒரு நகரில் அரசர்களோ அல்லது இந்நாளைய அரசியல் தலைவர்களோ இரவு தங்குவதில்லை என்று கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா? அந்த நகரம் சிவபெருமானின் ஜோதிர் லிங்கங்களில் ஒன்றான புனிதத் தலமாகும். மகா காலேஸ்வரரின் நகரம் என்றழைக்கப்படும் உஜ்ஜைன்தான் அந்த நகரம். இங்கு எந்த அரசராவது தங்கியிருந்தால் அவர் தனது ராஜ்ஜியத்தை அல்லது ஆளுமையை இழப்பார் என்று வரலாற்றுப்பூர்வமான நம்பிக்கை நிலவி வருகிறது!
எப்படி இந்த நம்பிக்கை ஏற்பட்டது என்பது ஒருவருக்கும் தெரியாது. ஆனால், இன்று கூட அரசியல் தலைவர்களோ, முதலமைச்சர்களோ அல்லது பிரதமரோ உஜ்ஜைன் நகருக்கு வந்தாலும், அருமையான அந்நகரில் இரவு தங்குவதில்லை.
சுதந்திரத்திற்கு முன்பு உஜ்ஜைன் நகரம் குவாலியரை ஆண்டு வந்த சிந்தியா அரசாட்சியின் கீழ் இருந்தது. அரச குடும்பத்தைச் சேர்ந்த யாராவது உஜ்ஜைனுக்கு வந்து இரவு தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், அவர்கள் உஜ்ஜைன் நகருக்கு வெளியில்தான் தங்கியுள்ளார். சிந்தியா அரச குடும்பம் மட்டுமின்றி, மற்ற பகுதி அரசர்களும் உஜ்ஜைனுக்கு வந்தால் இரவு அந்நகரில் தங்குவதில்லை. அரச குடும்பத்தினர் மட்டுமல்ல, அரசாட்சியில் உயர்ந்த பதவியை வகித்தவர்கள் கூட உஜ்ஜைனில் இரவு தங்குவதில்லை.
இதனால், தாங்கள் உஜ்ஜைன் வரும்போது தங்குவதற்காக அந்நகருக்கு வெளியே ஓர் அரண்மனையை சிந்தியா அரச குடும்பத்தினர் கட்டினர். அங்கிருந்து நகரின் நிர்வாகத்தை கவனித்தனர். அங்கு தங்கி நிர்வாகத்தை கவனிக்கும் அரசு அலுவலர்கள் கூட பகலில் உஜ்ஜைனுக்கு வந்துவிட்டு, இரவு தங்குவதற்கு காலியாடா அரண்டனை என்றழைக்கப்பட்ட அந்த மாளிகைக்கு திரும்பியதாக வாழ்வழி வரலாறு கூறுகிறது.
காலியாடா அரண்மனையில் இல்லாத வசதிகளே இல்லை என்று கூறலாம். அரண்மனையின் வெளிப்புறத்திலேயே அழகிய நீர்த் தொட்டி ஒன்று கட்டப்பட்டுள்ளது. சிந்தியா குடும்பத்தினர் சூரியனை வழிபடுபவர்கள் ஆதலால், அவர்கள் ஒரு அழகிய சூரிய கோயிலை அரண்மனைக்குள்ளேயே கட்டியுள்ளனர். சுதந்திரத்திற்குப் பிறகு சிந்தியாவின் ராஜ்ஜியம் கலைக்கப்பட்டது. ஆயினும், உஜ்ஜைனில் இரவு தங்காத அந்த வழக்கம் மட்டும் மாறவேயில்லை.
|