மக்களிடையே நாளுக்கு நாள் நம்பிக்கைகள் அதிகரித்து வரும் காலம் இது. மருந்துகளால் வியாதிகளை குணப்படுத்த முடியும். ஆனால் கையால் தொடுவதாலும், புனிதத் தீர்த்தத்தை மருந்தாக அளிப்பதாலும் நோயை குணப்படுத்துவது சாத்தியமா?
மிகக் கொடுமையான வியாதிகளைக் கூட தனது விரல்களால் தொடுவதன் மூலமும், நோய்வாய் பட்டவர்கள் உடலின் மீது சில சக்திகளை செலுத்துவதன் மூலமும் குணப்படுத்திக் கொண்டிருக்கும் ஒருவரை நாம் சந்திக்கப் போகின்றோம்.
இந்த சிகிச்சை முறைக்குப் பெயர் பிரம்ம ஞானம், அதாவது பிரபஞ்ச சக்தி. கேரளாவில் உள்ள இடத்தில் தொடுவதால் வியாதிகளை குணப்படுத்தும் பிரம்ம குரு எம்.டி. ரவி மாஸ்டர் என்பவரிடம் சிகிச்சை பெற்று குணமடைந்த நூற்றுக்கணக்கான மக்கள் உள்ளனர். அவர் இலவசமாகவே சிகிச்சை செய்கிறார்.
எம்.டி. ரவி மாஸ்டர் மருத்துவர் அல்ல. ஒரு தையல்காரர். அடிப்படை கல்வி கூட கற்காதவர். முன் பிறவி பாவங்களால்தான் எல்லா வியாதிகளும், கஷ்டங்களும் மனிதனுக்கு வருவதாகக் கூறுகின்றார். தன்னுடைய உடல் எல்லையை கடந்து சென்று இறையை எட்டுவதன் மூலம் ஒரு மனிதன் தனக்குள்ள எல்லா வியாதிகளில் இருந்தும் குணம் காண முடியும் என்கிறார்.
ரவி மாஸ்டர் நடத்திவரும் சிகிச்சை மையத்திற்குப் பெயர் பிரம்ம தர்ம ஆலயம். கேரள மாநிலத்தின் தலைநகர் திருவனந்தபுரத்தில் இருந்து 135 கி.மீ. தூரத்தில் உள்ள சங்கனாசேரியில் (கோட்டயம் மாவட்டம்) இவர் வாழ்ந்து வருகிறார். இவ்விடம் கொச்சியில் இருந்து 87 கி.மீ. தூரத்தில் உள்ளது. தான் பிரார்த்தனை செய்யும் போது எல்லா கடவுள்களிடமும் பேச முடியும் என்று கூறும் ரவி மாஸ்டர், நான் ஒரு மனித கடவுள் அல்ல என்று கூறுகிறார். மக்களுக்கு சேவை செய்வதே இந்த வாழ்க்கையில் தனக்கு விதிக்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறார்.
|