சனிப்பெயர்ச்சியின் காரணமாக நட்புறவில் ஏதேனும் தாக்கம் இருக்குமா? அவ்வாறு இருந்தால் என்ன செய்வது? எது பரிகாரம்? என்று கேட்டதற்கு ஜோதிட ரத்னா டாக்டர் கே.பி. வித்யாதரன் அளித்த விளக்கம் :
சனியே நட்புக்குரிய கிரகமாகும். சகிப்புத் தன்மை, கூட்டு முயற்சி, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை ஆகியவற்றை கொடுக்கும் நல்ல கிரகம் சனி.
சனியின் நட்சத்திரம், அதன் ராசி, சனியின் லக்னம், சனியின் எண்ணான எட்டு, இவற்றில் பிறந்தவர்கள், பொருளாதார ரீதியிலும், பழகுதிறன், பணித்திறன், பணியாற்றும் வகை ஆகியவற்றில் குறைவாக உள்ளவர்களை ஒதுக்கித் தள்ளாமல் அவர்களிடம் விருப்பத்துடன் பேசி தங்களுடன் இணைத்து உயர்த்துவார்கள்.
இனத்தாலோ, மதத்தாலோ, தோற்றத்தையோ அடிப்படையாக வைத்து தங்களிடம் திறன் இருந்தும் அங்கு முக்கியத்துவமும் முன்னுரிமையும் தரப்படாமல் ஒதுக்கப்பட்டால் உடனடியாக வெளியேறி, தனக்கென்று ஒரு தனி அமைப்பை உருவாக்கி பாதிக்கப்பட்டவர்களையும் அதில் இணைத்து ஒரு சவாலாக இருப்பார்கள். சனியின் ஆதிக்கத்தினால் அவர்களை பாதித்தவர்களே வியக்கும் அளவிற்கு பிரம்மிக்கும் நிலைக்கு உயர்வார்கள்.
நட்பு என்பதே மீண்டும் நினைத்துப் பார்த்து மகிழ்வுறும் ஒரு மனப்பான்மைதான். இந்த மீள் பார்வையை அளிக்கும் கிரகமே சனிதான். நன்றி மறவாமை எனும் பெரும் குணத்திற்குரிய கிரகம் சனி பகவான்தான்.
ஓரிரு வார்த்தைகளால் கோபப்பட்டு அதனால் நட்பு முறிந்து போனவர்களும், பழைய நல்ல நிகழ்வுகளை நினைத்துப் பார்த்து மீண்டும் அந்த நட்புறவை புதுப்பித்துக் கொள்ளும் நிலை ஏற்படும். இப்படிப்பட்ட மன்னிப்பு குணத்தை அளிப்பதும் சனிதான்.
|