ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்:
பூர்வ காலங்களில் பார்க்கப் போனால் துறவிகள் விரும்பி செய்யும் பூஜை கோ பூஜை. சங்கர மடம், அரவிந்தர், ராமகிருஷ்ண பரம ஹம்சர், விவேகானந்தர் என அனைத்து துறவிகளும் செய்தது கோ பூஜை.
பசுவிற்குள் தேவர்களும், மூவர்களும் இருப்பதாக ஐதீகம். தேவலோகப் பசுவின் படத்தை எடுத்துப் பார்த்தால் அதில் வாலிற்குப் பின் லட்சுமி இருப்பது போல் இருக்கும். அதனால்தான் இன்றும் பசுவின் வால் பகுதியை தொட்டுக் கும்பிடும் வழக்கம் நம்மிடம் உள்ளது.
பசு மாட்டின் குளம்பு முதல் கொம்பு வரை தேவர்களும், மூவர்களும் இருப்பதாகக் கருதப்படுகிறது. அறிவியல் பூர்வமாகப் பார்க்கப் போனால், பசுவின் கோமியம் கிருமி நாசினியாகப் பயன்படுகிறது. சாணமும் அவ்வாறுதான். பாலும் குழந்தைகளுக்குக் கொடுக்கக் கூடிய அளவிற்கு உள்ளது.
மற்ற மிருகங்களின் பால் எல்லாம் குழந்தைகளுக்குக் கொடுக்கும்படியாக இல்லை. கழுதையின் பால் வேண்டுமானால் மருத்துவத்திற்காக ஒரு பாலாடை அளவிற்கு மட்டுமே கொடுக்கும் படியாக உள்ளது. எனவே தினசரி குழந்தைகளுக்கு கொடுக்கும் அளவிற்கு பசும் பால் உள்ளது.
மேலும், சைவமாக இருப்பதாலும், சாதுவாக இருப்பாலும், நமக்குப் பயன்பாடாக இருப்பதாலும் அதனை நாம் உடன் வைத்திருக்கிறோம்.
பிரம்மஹத்தி தோஷம்!
எவ்வளவு பெரிய பிரம்மஹத்தி தோஷம் இருந்தாலும் பசுவைத் தானமாகக் கொடுத்துவிட்டால் அந்த தோஷம் எல்லாம் விலகும் என்று அதர்வன வேதங்கள் சொல்லி இருக்கிறது.
ராஜ ராஜ சோழன், சில பிராமணர்கள் உளவாளிகாளாக இருந்த காரணத்தால் அவர்களை தண்டித்தான். அதனால் அவனை பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. அதற்கு பரிகாரமாக பொன்னால் பசு செய்து அதற்குள் நுழைந்து வெளியே வந்து அந்த பொன் பசுவை தானமாகக் கொடுத்ததால் அவனது பிரம்மஹத்தி தோஷம் விலகியது. அதன்பிறகுதான் அவன் பெரிய கொடிய நோயில் இருந்து விடுபட்டதாக கூறும் சான்றுகள் உள்ளன.
ராஜ ராஜ சோழன், எல்லாக் கலைகளிலும் சிறந்த கலைஞர்களை தேர்ந்தெடுத்து தன்னுடன் வைத்துக் கொண்டார். அதுபோலத்தான் பரிகாரப் பூஜைகள் எல்லாம் பார்க்கப் போனால் தேவர்கள், மூவர்கள் பின்பற்றிய பூஜைகள் எல்லாம் ராஜ ராஜ சோழன் மூலமாகத்தான் உயிர்த்தெழுந்தது.
அப்போது கோ பூஜை என்பது மிக முக்கியத்துவம் பெற்று இருந்தது. தங்க பசுவின் வாய்ப் பகுதி வழியாக நுழைந்து வால் பகுதி வழியாக வெளியே வந்து அதனை தானமாகக் கொடுக்கும் பரிகாரத்தை ராஜ ராஜ சோழன் பல கோயில்களில் செய்துள்ளான்.
குறிப்பாக நண்டானூர் என்ற இடத்தில் இருக்கும் கற்கடேஸ்வரர் கோயிலில் (நண்டு சிவனை வழிபட்ட இடம்) இந்த பரிகாரத்தை ராஜ ராஜ சோழன் நிறைவேற்றியுள்ளான். அதன் மூலம் பிரம்மஹத்தி தோஷத்தில இருந்து நீங்கியுள்ளான்.
ஆனால் சாதாரண மக்கள் இதுபோன்று பொன்னால் பசுவை செய்ய இயலாது என்பதற்காகத்தான் அகத்தீக் கீரையை பசுவிற்கு கொடுக்கிறார்கள். அகத்திக் கீரையைக் கொடுத்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கி விடும். எல்லா விதமான தோஷங்களும் கோ பூஜை செய்வதன் மூலமாக நீங்கி விடுகிறது.
கோ பூஜை என்பது, பொய் சொல்வதால் ஏற்படும் தோஷங்களை நிவர்த்தி செய்யும். உடலால் செய்யும் கொடுமையால் ஏற்படும் தோஷம், காம இச்சையைக் கட்டுப்படுத்தும் சக்தி அல்லது காமத்தால் அத்துமீறி செய்த பாவங்கள் போன்றவற்றை இந்த கோ பூஜை நீக்கும். அதனால்தான் கோ பூஜைகள் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது.
அதனால்தான் அரசன் இருக்கும் அரண்மனைக்குள் நுழைந்தால் லாயத்தில் குதிரை கட்டி இருப்பது போன்று, துறவிகள் இருக்கும் மடத்திற்குள் நுழைந்தால் பசு இருக்கும் காட்சியும் காணப்படும்.
பொய் சொல்லாமல் இருக்க முடியாது. சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் பொய் சொல்லலாம். அரசு ரகசியங்கள் போன்றவற்றை மறைப்பதற்காக பொய்களை சொல்கின்றனர். அதனால் ஏற்படக்கூடிய தோஷங்களை நீக்கும். குறிப்பாக உடலில் ஏற்படும் நோய்களை கோ பூஜை நீக்கும். மிகவும் குறிப்பிட்டு சொல்வதென்றால் மன உளைச்சல், ஒவ்வொமையால் ஏற்படும் பாதிப்புகள் போன்றவற்றை நீக்கும்.
மாடு தொழுவத்தை பெருக்கி, சாணம், கோமியம் குழைந்து இருப்பதை தோலில் பூசினாலே பல தோல் நோய்கள் தீர்கின்றன.
ரமணரை ஒருவர் பார்க்க வந்திருந்தார். அவருக்கு தோல் வியாதி. எங்கெங்கோ சென்றும் குணமாகவில்லை. அவர் பெரிய தொழில் அதிபர். அவர் பல்வேறு பாவ செயல்களையும், பலரை காயப்படுத்தியும் உள்ளார். அதனால்தான் இந்த தோல்வியாதி என்று கூறி அவரை மாட்டுத் தொழுவத்தில் ஒரு மண்டலம் பணியாற்றச் சொன்னார். மாட்டிற்கு புல் போடுவதில் இருந்து சாணத்தை சுத்தம் செய்வது வரை எல்லாமே செய்யச் சொன்னார். ஒரு மாட்டை மட்டும் கையிலேயே பிடித்துக் கொண்டு மேய்த்து வா என்று சொன்னார். அந்த 48 நாட்களுக்குள் அவரது தோல் வியாதி சரியாகிவிட்டது.
|