திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : புதன், 11 அக்டோபர் 2017 (18:06 IST)

பரோலில் வெளிவந்த சசிகலா சாதித்தது என்ன?

தனது கணவர் நடராஜன் உடல் நலக்குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால், அவரை சந்திக்க 5 நாட்கள் பரோலில் வெளிவந்த சசிகலா  நாளை சிறைக்கு திரும்புகிறார்.


 

 
பரோலில் வெளிவந்த சசிகலாவிற்கு போயஸ்கார்டனில் தங்க வேண்டும் என்பதே ஆசையாக இருந்ததாம். ஆனால், தமிழக அரசு அதை நினைவிடமாக்க இருப்பதாக அறிவித்திருப்பதால் அங்கு தங்க முடியாத சூழ்நிலை. எனவேதான் இளவரசியின் வீடு அமைந்துள்ள தி.நகர் இல்லத்தில் தங்க வேண்டியதாயிற்று.
 
அதோடு, அவர் யாரையும் சந்தித்து பேசக்கூடாது மற்றும் அரசியல் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என பல கட்டுப்பாடுகள் அவருக்கு விதிக்கப்பட்டதால், அவரின் கைகள் கட்டப்பட்டன. எனவே, தினமும் காலை மருத்துவமனை சென்று தனது கணவரின் உடல் நலம் குறித்து விசாரித்து விட்டு, சுமார் ஒரு மணி நேரம் அங்கிருந்து விட்டு வீடு திரும்பினார்.
 
அவ்வளவுதானா என்றால் இல்லை.. அவர் யாரையும் சென்று சந்திக்கவில்லை. ஆனால், அவரை 25 எம்.எல்.ஏக்கள் மற்றும் 8 அமைச்சர்கள் சந்தித்து பேசியதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அதில் சில அமைச்சர்கள், வழக்கமான வேஷ்டி, சட்டை இல்லாமல், பேண்ட், சட்டை அணிந்து வீட்டின் பின்புற வாசல் வழியாக சந்தித்து பேசினார்கள் எனக் கூறப்படுகிறது. மேலும், வீடியோ கான்பிரன்ஸ் மூலம் பல முக்கிய அதிமுக நிர்வாகிகளிடம் அவர் பேசியதாகவும், தனக்கு துரோகம் செய்தவரோடு கை கோர்த்து செயல்பட்டால் அவ்வளவுதான் என அவர் எச்சரித்ததாகவும் செய்திகள் நேற்று வெளியானது.
 

 
அதோடு, ஓ.எஸ்.மணியன் உட்பட சில அமைச்சர்களிடம் சசிகலா தொலைப்பேசியில் பேசியதும் தெரியவந்துள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் அவர் பேச முயன்றார். ஆனால், அதை எடப்பாடி தவிர்த்து விட்டார் எனத் தெரிகிறது. மேலும், சசிகலா தரப்பிலிருந்து தொலைப்பேசி அழைப்பு வந்தால் போனை எடுத்து பேசுங்கள், அவரிடம் தினகரன் செய்த அனைத்து விஷயங்களையும் கூறி அவருக்கு புரிய வையுங்கள் என எடப்பாடி தரப்பிலிருந்து கூறப்பட்டதாக கேள்வி.
 

 
அதேபோல், தினகரன்  மீது பல புகார்களை அமைச்சர்கள் கூற இதுபற்றி தினகரனிடம் பேசுவதாக கூறினாராம் சசிகலா. அதோடு, தினகரனுக்கு பதிலாக, தனது சகோதரர் திவாகரனின் மகன் ஜெயனாந்திற்கு முன்னுரிமை கொடுத்து சில முக்கிய பொறுப்புகளை அளிக்க சசிகலா முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. சசிகலா சிறைக்கு சென்ற பின் அதற்கான அறிவிப்பு வரலாம் என்கிறார்கள். 
 
சிறையிலிருந்து சசிகலா வந்ததும், அவரின் ஒப்புதலோடு பல அறிவிப்புகளை வெளியிட திட்டமிட்டிருந்தார் தினகரன். ஆனால், அவருக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் அவற்றை நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது. இதில் தினகரன் கடும் அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது. 


 

 
எனவே, 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க விவகாரம் முடிவிற்கு வந்தவுடன், பொதுக்குழுவை கூட்ட தினகரன் முடிவெடுத்துள்ளார். அதற்கு சசிகலாவும் சம்மதம் தெரிவித்து விட்டார். இரட்டை இலை சின்னம் எடப்பாடி தரப்பிற்கு கிடைக்கக் கூடாது என்பதில் தினகரன் உறுதியாக இருக்கிறார்.
 
எனவே, சசிகலா சிறைக்கு சென்ற பின் பல அதிரடி அறிவிப்புகள் வெளியாகும் எனத் தெரிகிறது. சிறை நிர்வாகமும், தமிழக அரசும் பல கட்டுப்பாடுகள் விதித்திருந்தாலும், பல காரியங்களுக்கான விதைகளை விதைத்து விட்டு இன்று மீண்டும் சிறைக்கு திரும்புகிறார் சசிகலா.
 
அந்த விதைகள் முளைக்கத் தொடங்கும் போது தமிழக அரசியலில் சில மாற்றங்கள் நிகழலாம்.