ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 27 மே 2021 (08:03 IST)

கலெக்டர் மிரட்டலால் விருப்ப ஓய்வு பெற விரும்பும் விருதுநகர் மருத்துவமனை டீன்!

கலெக்டர் மிரட்டலால் விருப்ப ஓய்வு பெற விரும்பும் விருதுநகர் மருத்துவமனை டீன்!
கலெக்டர் மிரட்டல் காரணமாக மன உளைச்சல் ஏற்பட்டதால் விருப்ப ஓய்வு பெற விரும்புவதாக விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவமனை டீன் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்களுக்கு கடிதம் எழுதி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து விருதுநகர் அரசு மருத்துவமனை டீன் சுகந்தி ராஜகுமாரி அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
 
மே 19ல், விருதுநகர் அரசு மருத்துவக் கல்லுாரி டீனாக பொறுப்பேற்றேன். முன்னதாக, கன்னியாகுமரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லுாரி டீனாக பணியாற்றினேன். மே 18 மாலையில், இடமாறுதல் உத்தரவு வந்தது.
 
இரவில்மதுரை அழகர்கோவிலில் உள்ள வீட்டுக்கு வந்து தங்கி, மறுநாள் காலை பணியில் சேர்ந்தேன். விருதுநகரில் குடியிருப்பு வசதி இல்லாததால், மாலை, 4:00 மணிக்கு மதுரை வீட்டுக்கு வந்தேன்.மாலை, 5:29 மணிக்கு போனில் அழைத்த நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் அரவிந்த், கலெக்டர் கண்ணன் என்னை சந்திக்க வேண்டும் எனக் கூறியதாக தெரிவித்தார்.மாலை, 5:31 மணிக்கு கலெக்டரை போனில் தொடர்பு கொண்ட போது, 'அவசர சந்திப்பா அல்லது பேரிடர் மேலாண்மை குறித்து பேச வேண்டுமா' எனக் கேட்டேன்.'பணியில் சேர்ந்த அன்று மரியாதை நிமித்தம் என்னை சந்திக்க வேண்டும்' என கலெக்டர் தெரிவித்தார். மதுரையில் இருப்பதாலும், தொடர் மழை பெய்ததாலும் மறுநாள் வந்து சந்திப்பதாக கலெக்டரிடம் கூறினேன்.
 
ஆனால் இரவு, 8:00 மணிக்கு, தன்னை சந்திக்க வேண்டுமென கலெக்டர் வற்புறுத்தினார்.உயர் நீதிமன்றத்தில், சீனியர் வக்கீலாக பணிபுரியும் என் கணவர் ஐசக் மோகன்லால், கலெக்டரிடம் பேசிய போது, 'அவசர பணி என்றால், நானே காரில் அழைத்து வருகிறேன். 'மரியாதை சந்திப்பு என்றால், மறுநாள் வந்து சந்திப்பார்' எனக் கூறியுள்ளார். மறுநாள் மே 20 காலையில், மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் முறைகேடு குறித்த விசாரணையில் ஈடுபட்டதால், அந்த பணி முடிந்ததும், கலெக்டரை சந்திக்க முடிவு செய்தேன்.ஆனால், அதற்கு முன் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வந்த நபர், என்னிடம், 'நோட்டீஸ்' கொடுத்தார்.
 
அதில், 'மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மை செயலர், 3:00 மணிக்கு நடத்திய வீடியோ கான்பரன்சில் பங்கேற்காததற்காக, உங்கள் மேல் ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கூடாது' எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது.மே 19 மாலை, 4:00 மணி வரை மருத்துவமனையில் இருந்த போது, வீடியோ கான்பரன்ஸ் நடப்பதாக எந்த தகவலும் வரவில்லை. இது தொடர்பாக, கலெக்டர் எனக்கு போனில் தெரிவிக்கவும் இல்லை.விதி 18ன்படி, அரசு பணியாளர் நடத்தை விதிகளை நான் மீறியதாக எப்படி சொல்ல முடியும். என் கணவர் மிரட்டியதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். என் கணவர் கலெக்டரிடம் மிகவும் மதிப்பளித்தே பேசினார்.மறைமுக மிரட்டலோ, அரசியல் செல்வாக்கு இருப்பதாகவோ தெரிவிக்கவில்லை. அவசர பணி என்றால் காரில் வருவதாகத் தான் கூறினார்.
 
அவசர பணி அல்லது பேரிடர் மேலாண்மை என எதையும் கலெக்டர் கூறவில்லை. கொரோனா போன்ற சூழ்நிலையில், கலெக்டர் எங்களை போன்ற டாக்டர்களின் சேவையை பாராட்ட வேண்டும். அதற்கு பதிலாக அவமதித்து, மனரீதியாக துன்புறுத்தி விட்டார். கலெக்டரின் இத்தகைய செயலால், தொடர்ந்து டீனாக பணியாற்ற முடியாத சூழலில், விருப்ப ஓய்வு பெற நினைக்கிறேன்.
 
இவ்வாறு டீன் ராஜகுமாரி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.