வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 25 அக்டோபர் 2023 (12:35 IST)

திமுகவுக்கு உண்மை கசக்கத்தான் செய்யும் - வானதி சீனிவாசன்

திமுகவுக்கு உண்மை கசக்கத்தான் செய்யும் ராபர்ட் கால்டுவெல் எழுதிய ஆரிய - திராவிட இனவாத கட்டுக்கதை தான் திமுகவின் அடிப்படை கொள்கை என்று பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

''திருச்சியில் நடைபெற்ற மருது சகோதரர்கள் நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள், "பாரதம் விடுதலை அடைந்த தினத்தை கருப்பு நாளாக அறிவித்தவர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். சுதந்திரப் போராட்ட தியாகிகளை, மக்கள் நினைவிலிருந்து அகற்ற முயற்சிகள் நடக்கின்றன. மகாத்மா காந்தி உள்ளிட்டோர் தமிழ்நாட்டில் பிறந்திருந்தால் அவர்களையும் ஜாதி சங்கத் தலைவர்களாக மாற்றியிருப்பார்கள். தியாகிகளை ஜாதி தலைவர்களாக அடையாளப்படுத்தி மக்களை ஒன்று சேர விடாமல் தடுக்கின்றனர்" என்று பேசியுள்ளார். இதற்கு திமுக பொருளாளரும், அக்கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு அவர்கள் பதிலளித்துள்ளார். ஆளுநர் மீதான திமுகவின் விமர்சனத்திற்கு ஆளுநர்தான் பதிலளிக்க வேண்டும். ஆனால், ஆளுநர் ஆர்.என்.ரவியை பாஜக கட்சியோடு தொடர்புப்படுத்தி, பாஜக தலைவர் போல செயல்படுகிறார் என, டி.ஆர்.பாலு அறிக்கை விட்டிருப்பதால் அவருக்கு பதிலளிக்க விரும்புகிறேன். "ஆளுநர் பொறுப்பேற்பவர்கள் அரசியல்வாதி போல செயல்படவோ, பரப்புரைச் செய்யவோ மாட்டார்கள். அந்த மரபுக்கு மாறாக, அப்பட்டமான ஆர்.எஸ்.எஸ். பிரதிநிதியாக, மத்திய பா.ஜ.க. அரசின் ஊதுகுழலாக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார்" என டி.ஆர்.பாலு கூறியிருக்கிறார். 1991 முதல் 1996 வரை செல்வி ஜெயலலிதா அவர்கள் முதல்வராக இருந்தபோது ஆளுநராக இருந்த சென்னா ரெட்டி எப்படி செயல்பட்டார் என்பதும், அவருக்கு திமுக எப்படி ஆதரவளித்தது என்பதும் அனைவருக்கும் தெரியும். எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஆளுநருக்கு ஆதரவாக செயல்பட்டு, மாநில அரசுக்கு இடையூறுகள் செய்வதும், ஆட்சிக்கு வந்தால், 'ஆட்டுக்கு தாடி, நாட்டுக்கு ஆளுநர் பதவி எதற்கு?' என கேள்வி கேட்பதும் திமுக வழக்கமாக போடும் இரட்டை வேடம்தான்.

"திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்தை எழுதிய இராபர்ட் கால்டுவெல் அதிகம் படிக்காதவர் என்று ஆளுநர் விமர்சித்திருக்கிறார். கால்டுவெல் என்ன படித்தார் என்பதைவிட எத்தகைய ஆராய்ச்சி மேற்கொண்டார், அதன் விளைவு என்ன என்பதைத்தான் கவனிக்க வேண்டும். ஒருவரின் செயலும் அதன் விளைவும்தான் மக்களிடம் செல்வாக்கைத் தரும்" என்றும் டி.ஆர்.பாலு கூறியிருக்கிறார். மதம்மாற்றுவதற்காக தமிழ்நாடு அனுப்பி வைக்கப்பட்ட கிறிஸ்தவ பாதிரியார் ராபர்ட் கால்டுவெல்தான் திமுகவின் கொள்கை ஆசான். மக்களைப் பிளவுபடுத்தி, மதம் மாற்ற அவர் கையாண்ட பிரித்தாளும் சூழ்ச்சிதான், 'ஆரிய – திராவிட இனவாதம்'. திராவிடம் என்ற நிலப்பரப்பை, திராவிட இனமாக முன்வைத்தவர் ராபர்ட் கால்டுவெல்தான். அவர் எழுதிய ஆரிய - திராவிட இனவாத கட்டுக்கதையின் அடிப்படையில் பிறந்ததுதான் நீதிக்கட்சியும், திராவிடர் கழகமும், அதிலிருந்து உருவானதுதான் திமுக. அதைதான் ஆளுநர் ஆர்.என்.ரவி சுட்டிக்காட்டியிருக்கிறார். தங்கள் கொள்கை ஆசானை விமர்சித்தால் திமுகவுக்கு கோபம் வருவது இயற்கையானதுதான். "மகாத்மா காந்தியைச் சுட்டுக் கொன்ற கொடியவன் கோட்சே கும்பல். அந்த கோட்சேவையும் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு நீதிமன்றக் கூண்டில் ஏறியவர்களையும் கொண்டாடுகிற ‘பண்பாட்டை’க் கடைப்பிடிக்கும் இயக்கத்தின் சார்பில் ஒவ்வொரு மேடையிலும் திருவாய் மலர்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி" என, டி.ஆர்.பாலு அறிக்கையில் கூறியிருக்கிறார். முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் குற்றவாளிகள் என தீரப்பு கூறப்பட்டு கருணை அடிப்படையில் விடுதலையானவரை, முதலமைச்சராக இருப்பவரே கட்டியணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பெருமையும், வரலாறும் உலகத்திலேயே திமுகவுக்கு மட்டும்தான் உண்டு. "தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் சுகம் அனுபவித்துக் கொண்டு என்றும், ஆளுநர் பதவியை விட்டு விலகி- அரசியல்வாதியாக- ஏன் பா.ஜ.க.வின் தலைவராகவோ- ஆர்.எஸ்.எஸ்.-ஸின் தலைவராக ஆகட்டும்" என்றும் டி.ஆர்.பாலு கூறியிருக்கிறார்.

ஆளுநருக்கு மட்டுமல்ல, அரசு பதவியில் இருக்கும் அனைவரது செலவுகளையும் அரசுதான் ஏற்கிறது. முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின், அமைச்சர்களுக்கான செலவுகளுக்கான பணம் அவர்களது வீட்டில் இருந்தா வருகிறது? மக்கள் வரிப்பணத்தில்தான் முதலமைச்சரும், அமைச்சர்களும் வலம் வருகிறார்கள்?சென்னையில் உள்ள அமைச்சர்களுக்கான சொகுசு இல்லங்கள் அறிவாலய அறக்கட்டளையில் வாங்கப்பட்டதா? அல்லது அமைச்சர்கள் உழைத்து சம்பாதித்ததா? வாரிசு அரசியல், ஊழலில் ஊறித் திளைக்கும் திமுகவுக்கு உண்மை சுடத்தான் செய்யும். மக்கள் அனைத்தையும் அறிவார்கள். திமுகவுக்கு பாடம் புகட்டுவார்கள்'' என்று தெரிவித்துள்ளார்.