திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 20 அக்டோபர் 2023 (20:25 IST)

உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு தொழிலாளர்களுக்கு ஆறுதலாக அமையும்- அண்ணாமலை

இன்றைய தினம், மாண்புமிகு உச்சநீதிமன்றம்,  மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்றும், கழிவுநீர் அகற்றும் பணியின் போது உயிரிழப்பு நேர்ந்தால், அவர்களுக்கு இழப்பீடாக, குறைந்தது ரூ.30 லட்சம் வழங்க வேண்டும் என்றும், கழிவுநீர் அகற்றும்போது நிரந்தர உடல் பாதிப்பு ஏற்பட்டால்,  ரூ.20 லட்சம் இழப்பீடு தர வேண்டும் என்றும் உத்தரவிட்டிருப்பதை, தமிழக பாஜக  சார்பாக மனமார வரவேற்கிறோம் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தன் வலைதள பக்கத்தில், 
 
''மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு  நரேந்திரமோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு, கையால் துப்புரவு செய்பவர்களின் மறுவாழ்வுக்கான சுயவேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ்,  அடையாளம் காணப்பட்ட மற்றும் தகுதியுள்ள 58098 தொழிலாளர்களுக்கு, ஒரு குடும்பத்திற்கு ரூபாய் 40,000, மற்றும் அடையாளம் காணப்பட்ட 1935 தொழிலாளர்களுக்கும், அவர்களைச் சார்ந்தவர்களுக்கும் மாற்று சுயதொழில் திட்டங்களுக்கு மூலதன மானியம் ரூபாய் 5,00,000  வழங்கியிருக்கிறது. மேலும், 22294 தொழிலாளர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு உதவித்தொகையுடன் ரூ.2000 உடன் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பயிற்சி காலத்தில் மாதம் ரூபாய் 3,000 உதவித் தொகையுடன், வெற்றிகரமான பயிற்சி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு அரசாங்க அங்கீகாரம் பெற்ற பயிற்சி சான்றிதழ்கள் மற்றும் நிலையான வேலைவாய்ப்புகளுக்கான உதவிகளும் வழங்கப்படுகின்றன. 
 
கையால் துப்புரவு செய்பவர்களின் மறுவாழ்வுக்கான மத்தியத் துறை சுயவேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ், துப்புரவுத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு, சாக்கடைகள் மற்றும் கழிவுநீர் தொட்டிகளை இயந்திரமயமாக சுத்தம் செய்வதற்கான கருவிகள், வாகனங்கள் வாங்க ரூபாய் 5 லட்சம் வழங்கப்படுகிறது. 
 
தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ், அக்டோபர் 2, 2014 முதல், கிராமப்புறங்களில் 11.05 கோடிக்கும் அதிகமான சுகாதார கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. மேலும் 62.81 லட்சத்திற்கும் அதிகமான நகர்ப்புறங்கள் மற்றும் சுகாதாரமற்ற கழிப்பறைகள் சுகாதார கழிப்பறைகளாக மாற்றப்பட்டுள்ளன. கைகளால் சுத்தம் செய்யும் வழக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு இந்த இயக்கம் பெரும் பங்களிப்பை அளித்தது. 
 
இயந்திரமயமாக்கப்பட்ட துப்புரவு சுற்றுச்சூழல் அமைப்புக்கான தேசிய நடவடிக்கை" (NAMASTE) திட்டம், நாட்டின் 4800 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும், அடுத்த மூன்று ஆண்டுகளில், 2025-26 வரை ரூ. 349.70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டம், கையால் துப்புரவு செய்பவர்கள் மற்றும் கழிவுநீர் தொட்டிகளை பாதுகாப்பின்றி சுத்தம் செய்வதில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் மறுவாழ்வு மற்றும், பாதுகாப்பான, இயந்திரங்களைப் பயன்படுத்தி சுத்தம் செய்வதை ஊக்குவித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. 
 
2018 முதல் 2022 வரை, நாட்டிலேயே அதிகமாக, 52 கழிவு நீர் அகற்றும் தொழிலாளிகள் பலியான தமிழகத்தில், மத்திய அரசின் நலத்திட்டங்களும், மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவும், தொழிலாளர்களுக்கு மிகப்பெரும் ஆறுதலாக அமையும்'' என்று தெரிவித்துள்ளார்.