திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 14 நவம்பர் 2023 (14:03 IST)

'போதையை ஒழிக்காமல் புதிய விடியல் பிறக்காது' - ராமதாஸ்

'போதையை ஒழிக்காமல் புதிய விடியல் பிறக்காது' என்று மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

''தீபஒளி போதை விபத்து, மோதல்களில் 20 பேர் சாவு, மகளிர் உரிமைத் தொகையாக வழங்கியது ரூ.1138 கோடி... மது விற்பனை மூலம் 3 நாட்களில் வசூலித்தது ரூ.633 கோடி - போதையை ஒழிக்காமல் புதிய விடியல் பிறக்காது

தமிழ்நாட்டில் தீப ஒளி திருநாளில் மட்டும் சென்னையில் கட்டுப்பாடின்றி ஓடிய மகிழுந்து மோதியதால் இருவர், சத்தியமங்கலத்தில் மரத்தில் மகிழுந்து மோதி நால்வர் உள்பட குடிபோதையால் நிகழ்ந்த விபத்துகள் மற்றும் கொலைகளில் 20 பேர் உயிரிழந்திருப்பதாக காவல்துறையினரை மேற்கோள்காட்டி வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கின்றன. உயிரிழந்த அனைவரின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். மகிழ்ச்சியாக கொண்டாடப்பட வேண்டிய தீபஒளி திருநாளில், போதையின் ஆதிக்கம் காரணமாக 20 உயிர்கள் பலியாகியிருப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. சென்னையில் நடந்த விபத்து உள்ளிட்ட பல நிகழ்வுகளுக்கு மது மற்றும் கஞ்சா போதை தான் காரணம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிர்க்கொல்லி மதுவையும், கஞ்சாவையும் ஒழிக்க வேண்டும் என்பதற்கு இதை விட வலிமையான காரணங்கள் இருக்க முடியாது. மற்றொருபுறம், தீபஒளி திருநாள் மற்றும் அதற்கு முந்தைய இரு நாள்களில் மட்டும் தமிழ்நாட்டில் ரூ.633 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. இது கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின்படி கடந்த 10-ஆம் நாள் வழங்கப்பட்ட 1138 கோடியில் பாதிக்கும் அதிகமாகும்.

மகளிர் உரிமை, வாழ்வாதாரம், நிதி உதவி, குடும்ப உதவி என பல்வேறு பெயர்களில் மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டாலும் கூட, அதில் பெரும் பகுதி மதுவணிகம் என்ற பெயரில் அரசுக்கே திரும்ப வரும் அவலம் தான் காலம் காலமாக நடந்து கொண்டிருக்கிறது. இதே நிலை நீடிக்கும் வரை தமிழக மக்களுக்கு எந்த விடியலும் கிடைக்காது. தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மது மட்டுமே ஒற்றை போதை ஆதாரமாக இருந்து வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக கஞ்சா போதை கலாச்சாரம் தமிழ்நாட்டில் தலைவிரித்தாடுகிறது. குக்கிராமங்களின் சந்து பொந்துகளில் கூட கஞ்சா தடையின்றி கிடைக்கிறது. பால்மனம் மாறாத சிறுவர்கள் கூட கஞ்சா போதைக்கு அடிமையாகும் அவலம் ஏற்பட்டிருக்கிறது. கஞ்சா போதைக்கு முடிவு கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வரும் போதிலும், கஞ்சா ஒழிப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எட்டப்படவில்லை. மதுவும், கஞ்சாவும் தான் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், சட்டம் -ஒழுங்குக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளன. தமிழ்நாட்டில் திறமையான மனிதவளம் இருக்கும் போதிலும், அவர்களில் பெரும்பான்மையினர் மதுவுக்கு அடிமையாகி தங்கள் திறமையை அழித்துக் கொள்கின்றனர். மது போதையில் நடைபெறும் விபத்துகள் மற்றும் கொலை உள்ளிட்ட குற்றச்செயல்கள் தான் தமிழகத்தின் அமைதிக்கு ஆபத்தாக உள்ளன.

மதுவையும், கஞ்சாவையும் ஒழிக்காமல் தமிழ்நாட்டை முன்னேற்ற முடியாது என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. எனவே, தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை ஏற்படுத்துவதுடன், கஞ்சா நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழிக்க அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்''என்று தெரிவித்துள்ளார்.