2.5 கிலோ தங்கம், 5 தங்க பிஸ்கட்டுகள் பறிமுதல்: விமான நிலையத்தில் தீவிர சோதனை


Ashok| Last Updated: புதன், 20 ஜனவரி 2016 (16:13 IST)
சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட  2.5 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கடத்தி வந்த பயணியை ரகசிய இடத்தில் வைத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

 


சென்னை விமான நிலையத்திற்கு சிங்கப்பூரில் இருந்து இன்று அதிகாலை வந்த டைகர் ஏர்லைன்ஸ் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கும் போலீஸாருக்கும் ரகசிய தகவல் கிடைத்தது.
 
இதையடுத்து, அந்த விமானத்தில் இருந்து வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகளும் போலீஸாரும் சோதனை நடத்தினர். அப்போது சந்தேகம் படும் படி நடந்து கொண்ட செந்தில்குமார் என்ற பயணியை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் வைத்து இருந்த சூட்கேசில் மறைத்து வைத்து எடுத்து வந்த 2.5 கிலோ தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர். 
 
இதனை தொடர்ந்து, அவரை கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
மேலும், மஸ்கட்டில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு வந்த ராஜேஸ் என்ற பயணியிடமிருந்து 5 தங்க பிஸ்கட்டுகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கடந்த சில நாட்களாக தங்கம் கடத்தல் அதிகரித்து வருவதால் சென்னை விமான நிலையத்தில் பயணிகளை போலீஸாரும் சுங்கத்துறை அதிகாரிகளும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :