ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 8 செப்டம்பர் 2018 (15:19 IST)

இது பழி வாங்கும் நோக்கம் ; ஜார்ஜ் கூறியது அனைத்தும் பொய் - எஸ்.பி. ஜெயக்குமார்

குட்கா விவகாரத்தில் பழி வாங்கும் நோக்கத்தில் முன்னாள் கமிஷனர் ஜார்ஜ் தன் மீது பழி சுமத்துவதாக விழுப்புரம் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

 
குட்கா விவகாரம் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் ரமணா மற்றும் காவல்துறை உயரதிகாரிகளான தமிழ்நாடு டிஜிபி டிகே.ராஜேந்திரன், முன்னாள் டிஜிபி ஜார்ஜ்,  உள்பட பலரது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சிபிஐ ரெய்டு நடத்தியது. நேற்று காலை வரை நீடித்த இந்த சோதனையில் பல ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.   குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவராவ் உட்பட 5 பேரை சிபிஐ போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 
 
அந்நிலையில், முன்னாள் கமிஷனர் நேற்று மாலை செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில்  “2016ம் ஆண்டு குட்கா சோதனை நடைபெற்ற போது நான் கமிஷனராக இல்லை. 2016 செப்டம்பர் மாதம்தான் நான் கமிஷனராக பதவியேற்றேன். குட்கா சோதனை நடைபெற்ற போது எனக்கு கீழே பணிபுரிந்த அதிகாரிகளை குட்கா விவகாரம் குறித்து விசாரனை நடத்தி எனக்கு அறிக்கை தாக்கல் செய்ய வலியுறுத்தினேன். ஆனால், துணை ஆணையர் ஜெயக்குமார் குட்கா பற்றிய பல தகவல்களை என்னிடமிருந்து மறைத்து விட்டார். அவர் சரியாக செயல்படவில்லை” என குற்றம் சாட்டியிருந்தார்.
 
ஜெயக்குமார் தற்போது விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றியுள்ளார்.
 
இந்நிலையில், இதுபற்றி இன்று செய்தியாளர்கள் முன்னிலையில் விளக்கம் அளித்த ஜெயக்குமார் “முன்னாள் கமிஷனர் ஜார்ஜ், தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க வேண்டுமே தவிர, பிற அதிகாரிகள் மீது பழி போடக்கூடாது. என் நேர்மையை சென்னை மக்கள் நன்றாக அறிவார்கள். பழி வாங்கும் நோக்கத்துடன் ஜார்ஜ் என் மீது குற்றம் சாட்டியுள்ளார்.  என் மீது எந்த குற்றமும் இல்லை. இதை எங்கு நிரூபிக்க வேண்டுமோ அங்கு நிரூபிப்பேன்” என அவர் கூறினார்.