1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 6 டிசம்பர் 2018 (06:38 IST)

சென்னையில் நெல் ஜெயராமன் காலமானார்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாமனிதர் நெல் ஜெயராமன் இன்று அதிகாலை இயற்கை எய்தினார்
தமிழக விவசாயிகளுக்காக ‘நமது நெல்லை காப்போம்’ என்ற அமைப்பின் மூலம் பல்வேறு சேவைகளை செய்து வந்தவர் ஜெயராமன். நெல் தொடர்பான சேவைகள் என்பதால் ‘நெல்’ ஜெயராமன் என்றே அனைவராலும் கொண்டாடப்பட்டவர். 
 
இயற்கை விவசாயத்தை பாதுகாக்க நெல் திருவிழா என்ற பேரியக்கத்தை உருவாக்கி நெல் சாகுபடியில் பல்வேறு சாதனைகளை படைத்தவர் தான் நம் ஜெயராமன். இவரது சேவையை பாராட்டி குடியரசு தலைவர் விருது, தமிழக அரசின் விருது, கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின் விருது உட்பட பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
எதிர்பாராத வகையில் அவரை புற்றுநோய் தாக்கியது. அவர் சென்னை தேனாபேட்டையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் விரைவில் பூரண குணமடைய வேண்டும் என்று பல்வேறு நடிகர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், காவல்துறையினர் என நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வந்தனர்.
கடந்த 2 வருடங்களாக சிகிச்சை பெற்று வந்த நெல் ஜெயராமன் சிகிச்சை பலனின்றி, இன்று அதிகாலை 5.10 மணிக்கு உயிரிழந்தார். தமிழகத்திற்கு மிகப்பெரிய பெருமை சேர்த்த இவரது மறைவு தமிழக மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.